‘பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியாதவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என் மனதைவிட்டு நீங்குவதில்லை’ – சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸுடன் சில நிமிடங்கள்….

இலங்கையில் நாட்டுப்புற, கிராமிய வாழ்க்கை முறையையும் கலாசாரத்தையும் காகிதத்தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைந்து மக்களைக் கவர்ந்தவர் சித்திரக் கலைஞர் நிஹால் சங்கபோ டயஸ் (வயது 63) காலிப் பகுதியை பிறப்பிடமாக கொண்ட இவர், தற்போது பத்தரமுல்லையில் வசிக்கின்றார். இவர் பிறப்பிலிருந்தே செவிப்புல னற்றவரும் வாய் பேச முடியாதவருமாவார். மாத்தறை செவிப்புலனற்றோர் ரோஹன பள்ளியில் கல்வி கற்றுள்ளார்.

சித்திரக்கலையில் தனது அபரிமிதமான ஆற்றலை வெளிப்படுத்தி சுவிட்ஸர்லாந்து மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் பல விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றவர்.


புகழ்பெற்ற சிற்பியும் சித்திரக் கலைஞருமான நிஹால் சங்கபோ இலங்கையில் அச்சடிக்கப்பட்ட பல முத்திரைகளுக்கு படங்களை வடிவமைத்திருக்கிறார்.


வரைதலுக்கான ஆர்வம் அவரது சிறு பராயத்திலிருந்தே வளர்ச்சியடைந்துள்ளதாக அவர் சைகை மூலம் தெரிவித்தார். மேலும் அவரது மனைவி அவர் சைகை மூலம் குறிப்பிடும் தகவல்களை மெட்ரோ நியூஸுக்காக எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.


“நான், எம் நாட்டில் மட்டுமல்லாது ஜேர்மனி, இந்தியா மற்றும் சுவீடன் போன்ற வெளிநாடுகளிலும் பல கண்காட்சிகளை நடத்தியுள்ளேன்.


ஜெனீவா மற்றும் ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் பல விருதுகளைப் பெற்று சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். பிறப்பிலிருந்தே செவிப்புலனற்றவனாகவும் பேச முடியாதவனாகவும் இருந்த எனக்கு சித்திரக்கலை வாழ்வாதாரத்துக்கு கைக் கொடுத்ததென்றால் அது மிகையில்லை.


எனது தகப்பனார் ஒரு பாடசாலை அதிபர். சிறு பராயத்தில் பலவிதமான பொருட்களைச் செய்வதற்காக சேற்றில் இறங்கி சேறு சேகரிப்பது என் பழக்கம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் சேற்றில் விளையாடுவதை எனது தாயார் கண்டிப்பார். ஆனால், எனது தந்தையாரோ காகிதத் தாள்களும் வர்ணங்களும் கொடுத்து என்னை ஊக்கப்படுத்துவார்.
தற்போது எனது மனைவியின் துணையால் என் படைப்புக்கள் உலகப் புகழ் பெற்றுள்ளன. 1976ஆம் ஆண்டு நுண்கலைப் பட்டப்படிப்பின் பின்  செவிப்புலனற்றோருக்கான ரோஹன பள்ளியில் வரைதல் (Art) ஆசிரியராகச் சேர்ந்தேன்.


அதன்பின் கொழும்பு மாநகர சபையின் அச்சடிக்கும் பகுதியில் தொழில்நுட்ப நிபுணராகப் பணிபுரிந்தேன்.
எனது வரைதல் திறமையால்1906 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் எனது படைப்புகளில் ஒன்றான சித்திரமொன்று இன்றும் பழைய நகர மண்டபத்தில் காட்சிக்காக வைக்கப்பட் டுள்ளது.

பிறப்பிலிருந்தே செவிப்புலனற்ற பேசமுடியா தவனான எனக்கு மனக் கண்ணில் உருவாகும் கற்பனைக் காட்சிகள் என்றுமே என் மனதைவிட்டு நீங்குவதில்லை. அவ்வாறு உதிக்கும் கற்பனைத் துளி ஒன்றுடன் நான் காணும் அழகைப் புகுத்தி அதனையே காகிதத் தாளிலும் கன்வஸ் துணியிலும் வரைய முயற்சிக்கின்றேன்.


மேலும், மற்றவர்களின் முகம் மற்றும் கண்களின் மூலம் அவர்கள் சொல்வதை உணர்கிறேன். இதனாலேயே சிலர் எனது கண்கள் மற்றவர்களினுடைய கண்களை விட வித்தியாசமானவை என்கிறார்கள்.


எனது படைப்புகளினூடே என்னை பற்றியும் எனது வாழ்க்கையை பற்றியும் எம்மைச் சூழ்ந்த உலகை பற்றியும் உங்களால் ஏதேனும் உணர முடிந்தால் அதுவே எனது மகிழ்ச்சியாகும். அத்துடன், எனது சித்திரக்கலை வளர்ச்சிக்கு மனைவியின் துணை மிகவும் உறுதுணையாக இருந்ததை இத்தருணத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் கூற விரும்புகிறேன்” என சைகை மொழி மூலம் தெரிவித்தார் நிஹால் சங்கபோ டயஸ்.

–ரேணுகா தாஸ்

(Visited 171 times, 1 visits today)

Post Author: metro