மட்டு. கொக்கட்டிச்சோலையில் 26 வயதான பெண்ணின் திடீர் மரணத்தில் சந்தேகம்; குற்றவாளியைக் கைது செய்யுமாறு கோரி பொலிஸ் நிலையம் முன் திரண்ட மக்கள் சந்தேகத்தில் இளைஞர் கைது: சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது

(மட்டு.சோபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் திங்கட்கிழமை மாலை பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதான வீதியில் முத்துலிங்கப்பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள ஜயரட்ணம் தர்மினி எனும் ஐந்து வயது பிள்ளையின் 26வயது தாயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கட்டிலில் உறங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவித்தார்.

குறித்த பெண் உயிரிழந்த பகுதியில் உள்ள வீட்டு மோட்டு வளையில் கயிறு ஒன்று தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பட்டிப்பளையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்த பெண் உயிரிழந்த சம்பவத்துடன் சந்தேகிக்கப்படும் இளைஞரை கைது செய்யாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற் கொண்டதாகவும் பிரதேச மக்கள் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து திங்கட்கிழமை இரவு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் திரண்டதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

(Visited 38 times, 1 visits today)