ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மாமனார்

தனது ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை சம்பவம் குறித்து சேலம் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரது மனைவி அம்பிகா (வயது 24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகனின் தந்தை பெரியசாமி (வயது 59), ஆடு வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன், வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவிடம் பெரியசாமி தகாத முறையில் நடக்க முயன்றார். அம்பிகா சத்தம் போடவே, அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் சென்று பெரியசாமியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அம்பிகா, வீட்டில் படுக்கை அறையில் மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து அம்பிகாவின் உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அம்பிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அம்பிகாவின் தலை மற்றும் உடலில் சிறு காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அம்பிகாவின் அண்ணன் பிரேம்குமார், சேலம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதில் தனது தங்கை அம்பிகாவை அவரது மாமனார் கொடுமைப்படுத்தி கொலை செய்துவிட்டார் எனவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து மர்ம மரணம் என பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதையடுத்து மாமனார் பெரியசாமி மீது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தமை மற்றும் கொலைக்கு காரணமாக இருத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையடுத்து, மாமனாரான பெரியசாமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறையிலுள்ள பெரியசாமியை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக பொலிஸ் தரப்பில் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அதன் பேரில் சேலம் நீதிமன்ற நீதிபதி விஜயன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பெரியசாமியை 2 நாள் பொலிஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து பெரியசாமியை பொலிஸ் காவலில் எடுத்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் மாமனார் பெரியசாமி கொலை செய்ததாக பொலிஸில் வாக்கு மூலம் அளித்தார்.
அதில் ”எனது மகன் முருகன் கூலித் தொழில் செய்வதால் அவன் அடிக்கடி வெளியில் சென்று விடுவான். இதனால் எனது மருமகள் அம்பிகா தனிமையில் வீட்டிருப்பாள்.

அவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு பலமுறை முயற்சி செய்தேன். எனது ஆசைக்கு அவள் இணங்கவில்லை. மாறாக என்னை அவள் மதிக்காமல் எதிர்த்து பேசிவந்ததால் அவள் மேல் நான் கோபமாக இருந்தேன்.
ஒரு நாள் எனது மருமகளுடன் உறவில் ஈடுபடுவதற்கு பலாத்காரம் செய்த போது, அவள் அலறி னாள். மருமக ளின் சத்தத்தை கேட்டு வந்த அயல வர்கள் என்னை கடுமை யாக திட்டியதுடன், பொலிஸில் மாட்டிவிடுவதாகவும் மிரட்டினர்.

இது எனக்கு மேலும் ஆத்திரத்தை தூண்டியது. குறித்த விடயம் எனது மகன் முருகனுக்கும் தெரியவந்த தையடுத்து, அவனும் என்னுடன் தகராறில் ஈடுபட்டான். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல எனது மகன் வெளியில் வேலைக்காக சென்றுவிட்டான்.

மருமகள் மட்டும் வீட்டில் இருப்பதையறிந்து வீட்டுக்குச் சென்றேன். அவரிடம் பலமுறை உறவுக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால், அவள் மறுத்தாள். அதில் ஆத்திரமடைந்த நான் அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அம்பிகாவின் தலையில் பலமாக தாக்கினேன்.

அதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த இடத்தை விட்டு தலைமறைவானேன். கொலை குறித்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் என்னை கைது செய்தனர்” என வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஆசைக்கு இணங்க மறுத்த தனது மருமகளை கொலை செய்ததாக ஒப்புக் கொண்ட மாமனார் பெரியசாமியை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மாவட்ட சிறையில் அடைத்துள்ளதாக சேலம் பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

(Visited 146 times, 1 visits today)

Post Author: metro