டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா: அதி சிறந்த வீரர் ரங்கன, அதி சிறந்த வீராங்கனை சமரி அதிரடி வீரர் அசேலவுக்கு நான்கு விருதுகள்

(நெவில் அன்­தனி)


பத்­த­ர­முல்லை வோட்டர்ஸ் எஜ் மண்­ட­பத்தில் செவ்­வா­யன்று நடை­பெற்ற டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான விருதை இலங்கை டெஸ்ட் அணியின் இட­துகை சுழல்­பந்­து­வீச்­சாளர் ரங்­கன ஹேரத் வென்­றெ­டுத்தார்.

அதி சிறந்த வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து ரங்கன ஹேரத் பெறுகின்றார்.     

 ………………………………………………………………

வரு­டத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீராங்­கனை விருது இலங்கை மகளிர் அணியின் முன்னாள் தலைவி சமரி அத்­தப்­பத்­து­வுக்கு வழங்­கப்­பட்­டது.

சர்­வ­தேச மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர்கள் கிரிக்கெட் போட்­டி­களில் வெகு­வாக பிர­கா­சித்­து­வரும் சக­ல­துறை வீரர் அசேல குண­ரட்ன நான்கு விரு­து­களை வென்று பலத்த பாராட்டைப் பெற்றார்.

அதி சிறந்த வீராங்கனைக்கான விருதை டயலொக் ஆசியாட்டா குழுமத்தின் பிரதம சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமலி நாணாயக்காரவிடமிருந்து சமிர அத்துப்பத்து பெறுகின்றார்.

…………………………………………………………

சர்­வ­தேச இரு­பது 20இல் அதி சிறந்த துடுப்­பாட்ட வீரர், அதி சிறந்த சக­ல­துறை வீரர், சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் அதி சிறந்த சக­ல­துறை வீரர், அதி நம்­பிக்­கைக்­கு­ரிய வீரர் ஆகிய நான்கு விரு­து­களை அசேல குண­ரட்ன வென்­றெ­டுத்தார்.

முனனேற்­றம்­கண்டு வரும் வீர­ருக்­கான விருது நிரோஷன் திக்­வெல்­ல­வுக்கு வழங்­கப்­பட்­டது. இவ் வருடம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, வாழ்நாள் சாத­னை­யாளர் விருது இலங்கை கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் (முன்னர் அழைக்­கப்­பட்ட பெயர்) முன்னாள் செய­லா­ளரும், 20 வரு­டங்­க­ளுக்கு மேல் செயற்­குழு உறுப்­பி­ன­ரா­கவும் பதவி வகித்த நீல் பெரே­ரா­வுக்கு வழங்­கப்­பட்­ட­போது அரங்கில் குழு­மி­யி­ருந்த அனை­வரும் எழுந்­து­நின்று அவரை கௌர­வித்து பாராட்­டினர்.

நம்பிக்கை நட்சத்திரத்திற்கான விருதை இந்தியாவின் 1983 உலக சம்பியன் அணித் தலைவர் கபில் தேவிடமிருந்து அசேல குணரட்ன பெறுகின்றார்.

………………………………………………………………….

வரு­டத்தின் ஊட­க­வி­ய­லா­ள­ருக்­கான விருது டெயலி மிரர் மற்றும் சண்டே டைம்ஸ் விளை­யாட்­டுத்­துறை ஆசி­ரியர் சம்­பிக பெர்­னாண்­டோ­வுக்கு வழங்­கப்­பட்­டது.

2016 ஜூன் முதல் 2017 மே மாதம் வரை­யான கிரிக்கெட் பரு­வ­கா­லத்தில் உள்ளூர் மற்றும் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பிர­கா­சித்த ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும், 54 விரு­துகள் வழங்­கப்­பட்­டன. கள மத்­தி­யஸ்­தர்­க­ளுக்கும், பொது மத்­தி­யஸ்­தர்­க­ளுக்கும் விரு­துகள் வழங்­கப்­பட்­டன.

வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடமிருந்து நீல் பெரேரா பெறுகின்றார்.

……………………………………………………………..

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் கௌரவ அதிதியாக இந்தியாவின் முன்னாள் உலக சம்பியன் அணித் தலைவர் கபில் தேவும் கலந்து சிறப்பித்தனர்.

(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)

(Visited 81 times, 1 visits today)

Post Author: metro