மக்களை சித்திரவதை செய்யும் பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை; இந்திய மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை

இந்தியாவில் பொதுமக்களை சித்திரவதை செய்ததாக தண்டனைக்குள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென இந்திய மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

சிறை மற்றும் பொலிஸ் நிலையங்களில் பொதுமக்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதை தடுக்க ஐ.நா. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளதால் சித்திரவதைக்கு எதிராக புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரைவுச் சட்டத்தை சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மாதிரி பொதுமக்களின் கருத்துக்காக இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மனித உரிமை ஆர்வலரும், இந்திய மேல்நீதிமன்ற சட்டத்தரணியுமான சுதா ராமலிங்கம் கூறுகையில், ‘மக்கள்தான் இந்நாட்டின் மகேசன்’ என்பதை வெறும் வார்த்தைகளால் மட்டும் கூறிவிடக் கூடாது.
அதை சட்டபூர்வமாகவும் நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கம். மனித உரிமை மீறலுக்கு எதிரான ஐ.நா. சபையின் பரிந்துரைகளை கண்டிப்பாக இந்தியாவிலும் அமுல்படுத்த வேண்டும். அதன்படி பொதுமக்களை சித்திரவதை செய்து அதன் மூலம் தண்டனைக் குள்ளாகும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டுமென சட்ட ஆணையம் தனது பரிந்துரைகளை இந்திய மத்திய அரசுக்கு வழங்கியிருப்பது மனித உரிமை ஆர்வலர்களுக்கு கிடைத்த ஆறுதலான விடயம்.

மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல்களில் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தற்போது ‘சித்திரவதை தடுப்புச் சட்டம் – 2017’ என்ற சட்ட வரைவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் -1973 பிரிவு 357பி இல் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கோர முடியும்.

மேலும், அந்த இழப்பீடு சமூக, பொருளாதார, மருத்துவ செலவு மற்றும் மறுவாழ்வுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான இழப்பீடாக இருக்க வேண்டும். புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளை மிரட்டல்களில் இருந்து பாதுகாக்க சரியான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்.

அதேபோல, இந்திய சாட்சியச் சட்டம் – 1872 பிரிவு 114பி என்ற புதிய ஷரத்தை சேர்ப்பதன் மூலம் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அதிகாரி அல்லது ஊழியர், தன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்பதையும் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும். இதற்கு முன்பு வரை ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் மட்டுமே விதிக்க முடியும்.

இந்த சட்டத் திருத்தம் அமுலானால், பொதுமக்களை மனிதாபிமானமின்றி சித்திரவதை செய்யக் கூடாது என்கிற பயம் அரசு ஊழியர்களுக்குக் ஏற்படும். அடிப்படை உரிமைகள் என்பது மக்களுக்குத்தானேயன்றி, அரசு ஊழியர்களுக்கு கிடையாது. இவ்வாறு அந்த வரைவுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  எனவே மனித உரிமை மீறலை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் வகையில் உள்ள இந்த சட்டத்திருத்தங்களை மத்திய அரசு உடனடியாக ஏற்று நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 30 times, 1 visits today)

Post Author: metro