பிள்ளைகளின் உடைகளை அழுத்துவதற்குச் சென்ற மனைவிக்கு மின்னழுத்தியால் சூடு வைத்த கணவன் – கணவன் உறங்கிய அறைக்குள் சென்றதால் சம்பவம்

(ரெ.கிறிஷ்ணகாந்)

மின்னழுத்தியினால் மனைவியை சுட்டுக் காயப்படுத்திய நபர் ஒருவரை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

சம்பவ தினத்தன்று காலையில் தனது பிள்ளைகள் இருவரது உடைகளை அழுத்துவதற்காக சந்தேகநபரின் மனைவி கணவன் உறங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளார்.

அதன்போது முதல் நாள் அருந்திய மதுவினால் ஏற்பட்ட கலக்கத்தில் படுத்திருந்த கணவன், “பிள்ளைகளின் உடைகளை உனக்கு பகலில் அழுத்திவைக்க தெரியாதா?” என மனைவியிடம் வினவியுள்ளார்.

அதற்கு அவர், “நான் வேலைப்பளு இல்லாத நேரத்திலேயே உடைகளை அழுத்துவேன்” என தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டுக் கோபமடைந்த அவரது கணவர் நன்கு சூடாகியிருந்த மின்னழுத்தியினால் 28 வயதான மனைவியின் கால்களில் சூடு வைத்துள்ளார்.

இதனையடுத்து அப் பெண் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இந் நிலையில், முறைப்பாட்டாளரான பெண்ணிடம் பெற்ற வாக்குமூலத்துக்கமையவே சம்பவத்தின் பின்னணியை அறிந்துகொண்ட பொலிஸார் சந்தேக நபரான பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜெயராம் டொஸ்கி யினால் தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

(Visited 155 times, 1 visits today)

Post Author: metro