குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த பெண் கணவனால் தாக்கப்பட்டபோது தப்புவதற்கு ஓடிச்சென்ற நிலையில் கிணற்றில் வீழ்ந்து காயமடைந்தார் – பெண்ணை காப்பாற்ற முயற்சித்த மக்களைத் தடுத்து வேடிக்கை பார்த்த கணவன் வெலிகமையில் கைது!

(ரெ.கிறிஷ்ணகாந், எஸ்.கே)

வெலிகம, முதுகமுவ பிரதேசத்தில் கணவனால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் ஓடிச் சென்று கிணற்றில் வீழ்ந்தபோது அவரைக் காப்பாற்றச் சென்ற அயலவர்களுக்கு இடமளிக்காது அவரைக் கொல்வதற்கு முயற்சித்த அந்த பெண்ணின் கணவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெலிகம, முதுகமுவ பிரதேசத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 42 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 30 ஆம் திகதி இந் நபர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தபோது அவரது மனைவி தனது 3 மாத குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தநிலையில் அதனைப் பொருட்படுத்தாது மனைவியை தாக்கியுள்ளார்.

அதன்போது கணவனின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக குழந்தையை கட்டிலில் போட்டுவிட்டு வீட்டு வாசலுக்கு ஓடிச்சென்ற வேளையில் கால் தடுக்கி வீட்டுக்கு முன்பாக இருந்த கிணற்றில் வீழ்ந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவ்வேளையில் அவரைக் காப்பாற்றுவதற்கு அயலவர்கள் அங்குவந்தபோதிலும் தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கு அவர்களுக்கு இடமளியாது சந்தேகநபர் மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்ததாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் கிணற்றில் வீழ்ந்து உயிருக்காக போராடிக்கொண்டிருந்த 36 வயதான அப் பெண்ணை சந்தேகநபரின் எதிர்ப்பையும் மீறி அயலவர் ஒருவர் கிணற்றில் பாய்ந்து காப்பாற்றியுள்ளார்.

இது குறித்து வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த வெலிகம பொலிஸார் அப் பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித் துள்ளனர்.

இதேவேளை, அச் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் சைக்கிளொன்றினூடாக தப்பிச்செல்ல முயற்சித்திருந்த நிலையில் மனைவியைக் கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இச் சந்தேகநபர் நேற்று முன்தினம் மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப் பட்டதையடுத்து எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

(Visited 74 times, 1 visits today)

Post Author: metro