புதுமணத் தம்பதிகள் தங்கிய ஹோட்டல் அறைக் கதவில் துவாரம்: முதலிரவுக் காட்சிகளை வீடியோ எடுத்திருக்கலாமென சந்தேகம் – மிகுதிப் பணத்தை செலுத்தாமலிருக்க நாடகம் ஆடுவதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவிப்பு

(எஸ்.கே.)

திருமணம் முடிவடைந்து தேனிலவுக்காக குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றுக்குச் சென்றிருந்த புதுமணத் தம்பதிகள், தாங்கள் தங்கியிருந்த சொகுசு அறையில் உள்ள கட்டில் தெரியும் வகையில் கதவில் சூட்சுமமான முறையில் துளையிட்டிருந்தமையைக் கண்டதால் திருமண தம்பதிகளின் தரப்புக்கும் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

தாங்கள் உறங்கிய கட்டிலுக்கு நேராக கதவில் துளையிட்டிருந்ததால் தாங்கள் தேனிலவை அனுபவித்ததை வீடியோவில் பதிவு செய்திருக்கலாமென புதுமணத் தம்பதிகள் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

அதையடுத்து பொலிஸாரும் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  அதன்படி அந்த அறையில் படுக்கை தெரியும் வகையில் இரு துவாரங்கள் கண்டறியப்பட்டன.

இது தொடர்பாக மேலதிகமாக ஆராய்வதற்கு பொலிஸ் குற்றப் பிரிவைச் சேர்ந்த விசேட பொலிஸ் குழு வொன்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மிகுந்த நம்பிக்கையில் இந்த ஹோட்டலில் அறையொன்றை ஒதுக்கியதாகவும் ஏதோவொரு வகையில் இத் தம்பதிகளின் அந்தரங்கத்தை வீடியோவில் பதிவு செய்திருந்தால் அது எதிர்காலத்தில் தம்பதிகளுக்கு மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்துமென மணமக்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில் மணமக்கள் அறையை ஒதுக்கிக்கொள்ள முற்பணத்தை மாத்திரம் வழங்கியதாகவும் எஞ்சிய பணத்தை கொடுக்காமலிருக்க இது போன்ற குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

குளியாப்பிட்டிய பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

(Visited 182 times, 1 visits today)

Post Author: metro