4 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து 4 வயது பிள்ளைக்கு தந்தையான நபர் தனது மனைவி கறுப்பு என்பதால் கைவிட்டார்: பிரிவதற்கோ விவாகரத்துக்கோ இணங்கப் போவதில்லை என மனைவி தெரிவிப்பு; சமரச முயற்சியில் தம்புத்தேகம பொலிஸார்

(எஸ்.கே.)

நான்கு வருடங்கள் காதலித்து திருமணம் செய்து நான்கு வயதான மகனையும் கொண்டுள்ள நபர் ஒருவர், தற்போது தனது மனைவி கறுப்பு எனக் கூறி மனைவியை கைவிட்டுள்ள சம்பவமொன்று தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நபர் தம்புத்தேகம நகரில் வர்த்தகம் செய்பவராவார். ஐந்து வருடங்களுக்கு முன்னரே நான்கு வருடங்கள் காதல் தொடர்பு வைத்திருந்த பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துள்ளனர்.

 

இவர்களுக்கு இப்போது நான்கு வயதில் பிள்ளை ஒன்று உள்ளது. ஐந்து வருடங்களாக இவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

 

ஆனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்து மனைவி கறுப்பு நிறமென்பதால் தம்மை விட்டுப் பிரியும்படி தொடர்ந்து மனைவியை அச்சுறுத்தி வந்தமை தொடர்பில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டையடுத்து தம்புத்தேகம பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பித்து விசாரணை மேற்கொண்டபோது தனது மனைவியின் நிறம் மாறாதிருப்பதால், அவரைக் கைவிட முடிவு செய்ததாக கணவன் தெரிவித்துள்ளார்.

இந்த நபர் இவ்வளவு காலமும் தன்னுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தியதாகவும் சமீப காலமாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதால் தம்மைக் கைவிடத் தீர்மானித்தபோதும் தாம் அவரை பிரிந்து செல்ல அனுமதிக்கப்போவதில்லை என்றும் எக்காரணத்தைக் கொண்டும் விவாகரத்துக்கு இணங்கப் போவதில்லையென்றும் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இஷாரா ஹேரத் இத்தம்பதியினரை சமரசம் செய்ய முயன்றபோதும் கணவன் அதற்கு இணங்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 181 times, 1 visits today)

Post Author: metro