19 வயதின்கீழ் ஆசிய இளையோர் கிண்ண கிரிக்கெட்: இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறி நேபாளத்திடம் இந்தியா எதிர்பாராத தோல்வி

மலேஷியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் கிரிக்கெட் போட்டிகளில் குழு பியில் இடம்பெறும் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையில் இன்று நடைபெறவுள்ள போட்டி முடிவில் தங்கியிருக்கின்றது.

 

பாகிஸ்தானுடன் கின்ராரா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தமையே இந்த நிலைக்கு காரணமாகும்.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றால் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு அற்றுப்போகும். ஆப்கானிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சம புள்ளிகள் கிடைக்கும் பட்சத்தில் நிகர ஓட்ட வேகத்தில் ஆப்கானிஸ்தான் முன்னிலையில் அடையும்.

பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை தோல்வியைத் தழுவியது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை இளையோர் அணி 49.4 ஒவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

ஆஷேன் பண்டார மாத்திரமே ஓரளவு திறமையாக துடுப்பெடுத்தாடி 49 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் இளையோர் அணி பந்துவீச்சில் எம். மூசா, எம். ரியாஸ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 32.1 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் ஆர். நஸிர் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை இளையோர் பந்துவீச்சில் ப்ரவீன் ஜயவிக்ரம 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இலங்கை தனது முதலிரண்டு போட்டிகளில் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் ஆப்கானிஸ்தானையும் வெற்றிகொண்டிருந்தது.

 

நேபாளத்திடம் இந்தியா தோல்வி

பயோமாஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற குழு ஏ போட்டி ஒன்றில் இந்தியாவை 19 ஓட்டங்களால் முற்றிலும் எதிர்பாராத விதமாக நேபாளம் வெற்றிகொண்டது.

நேபாள வீரர் டி. எய்ரியின் சகலதுறை ஆட்டம் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

 

எண்ணிக்கை சுருக்கம்:

நேபாளம் 50 ஓவர்களில் 185 க்கு 8 விக். (டி. எய்ரி 88)

இந்தியா 48.1 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 166 (எச். ரானா 46, டி. எய்ரி 39 க்கு 4 விக்.)

 

(Visited 64 times, 1 visits today)

Post Author: metro