சீரற்ற காலநிலையினால் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு!

(ரெ.கிறிஷ்ணகாந்)

கடும் காற்று மற்றும் மழையினால் நாடு பூராகவும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 55 ஆயிரத்தையும் கடந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை 15 மாவட்டங்களை சேர்ந்த 14, 617 குடும்பங்களைச் சேர்ந்த 55, 855 பேர் இவ்வாறு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் 7 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, 30 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 8 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.

இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய 430 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 11, 597 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்காக 28 பாதுகாப்பு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 901 குடும்பங்களை சேர்ந்த 3, 279 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய தெரிவித்துள்ளது.

(Visited 33 times, 1 visits today)

Post Author: metro