‘திருமணத்துக்கு வற்புறுத்தியதால் குழந்தையோடு கொன்று புதைத்தேன்’; கள்ளக்காதலியை கொலை செய்த கள்ளக்காதலன் வாக்குமூலம்

தமிழகத்தில் பாண்டிச்சேரி பகுதியில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய கள்ளக்காதலியை குழந்தையோடு கொன்று புதைத்து விட்டதாக கள்ளக்காதலன் பொலிஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்தக் கொலை குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, புதுவை கிளியனூர் சித்தேரி பகுதியில் பிறந்து சில மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது. இந்த குழந்தையின் சடலத்தை வைத்து பொலிஸார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாண்டிச்சேரி வானரப்பேட்டையை சேர்ந்தவர் குணவதி (வயது 37). சில வருடங்களுக்கு முன்னர் இவரது கணவர் விபத்தில் இறந்துள்ளார். குழந்தைகள் இல்லை. இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். வியாபாரத்துக்கு தேவையான பூக்கள் வாங்க புதுச்சேரி செல்லும் போது அங்கு பூ வியாபாரம் செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இது கள்ளக்காதலாக மாறியுள்ளதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிவந்தனர். சில சமயம் உறவில் ஈடுபட்டதில் குணவதி கர்ப்பமடைந்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனை குணவதி வற்புறுத்தினார். ஆனால் பிரபாகரன் நழுவி வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதன்பின்னரே பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திருவண்ணாமலையில் இருப்பது குணவதிக்கு தெரியவந்தது. இதில் ஆத்திரமடைந்த குணவதி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தகராறில் ஈடுபட்டு தொடர்ந்து பிரபாகரனை வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால், அதை விரும்பாத பிரபாகரன், கடந்த வாரம் குணவதியை குழந்தையுடன் அழைத்துச்சென்றுள்ளார். அதன்பின்னர் குணவதியும், குழந்தையும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து குணவதியின் பெற்றோர் கோரிமேடு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தேரி பகுதியில் பிறந்து சில மாதங்களேயான ஆண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது. அது குணவதியின் குழந்தையென்பதை அவரது பெற்றோர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து குணவதியும் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பொலிஸார் சந்தேகித்தனர். குணவதியின் கள்ளக்காதலன் பிரபாகரனை பொலிஸார் கைது செய்து விசாரித்தபோது குணவதியையும், குழந்தையையும் கொலை செய்து சடலங்களை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் எனது சொந்த ஊர். புதுவையில் தங்கியிருந்து பூ வியாபாரம் செய்து வந்தேன். அப்போது குணவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக பழக்கம் நீடித்தது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் வற்புறுத்தினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடைக்கு அல்லது வீட்டுக்கு வந்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டும் தொந்தரவு செய்தார். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஆனாலும் திருமணம் செய்ய கோரி வற்புறுத்தினார். ஒருகட்டத்தில் தனது குழந்தையுடன் சென்று எனது மனைவியிடம் என்னுடன் உள்ள தொடர்பு பற்றி சொல்லிவிடுவதாக கூறினார்.

குணவதி மிரட்டியதால் கோரிமேடு பகுதியில் இருந்து குணவதியை குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிளியனூர் சித்தேரிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு முதலில் குணவதியை கழுத்தை இறுக்கி கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசினேன். பின்னர் குழந்தையையும் கழுத்தை இறுக்கி கொலைசெய்து உடலை சித்தேரி பகுதியில் வீசி எறிந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

கொலை நடந்த சித்தேரி பகுதிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றனர். குணவதியை கொலை செய்தது எப்படி? என்பது குறித்தும், சடலங்களை வீசிய இடங்களையும் பொலிஸாரிடம் அவர் காண்பித்தார். அங்குள்ள முட்புதரில் இருந்து குணவதியின் உடலை அழுகிய நிலையில் பொலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.   கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்ட பிரபாகரனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறைச்சாலையில் அடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(Visited 54 times, 1 visits today)

Post Author: metro