“டெங்க்வெக்ஸியா” டெங்கு தடுப்பு மருந்தை வாபஸ் பெறுமாறு சனோபி நிறுவனத்துக்கு பிலிப்பைன்ஸ் உத்தரவு

டெங்கு நோயினால் பாதிக்கப்படாதவர்களுக்கு செலுத்துவதால் சுகாதார பாதிப்புகளை ஏற்படுத் துவதாகக் கூறப்படும் டெங்கு நோய்த் தடுப்பு மருந்தான டெங்க்வெக்சியாவை வாபஸ் பெறுமாறு பிலிப்பைன்ஸ் அரசு குறித்த மருந்தைத் தயாரிக்கும் பிரெஞ்ச் நிறுவனமான சனோபி பாஸ்டருக்கு உத்தரவிட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் உணவு மற்றும் மருந்து நிர்வாகப் பிரிவு நேற்று முன்தினம் விடுத்த அறிவுறுத்தலில் இந்த மருந்தின் விற்பனை, விநியோகம், சந்தைப்படுத்தலை இடைநிறுத்த வேண்டும் எனவும் அது தொடர்பான பிரசாரம் ஒன்றை நடத்த வேண்டும் எனவும் இந்தத் தடுப்பு மருந்தினால் எவராவது உடல்நலப் பாதிப்புக்கு உள்ளானாலோ அல்லது உயிரிழந்தாலோ தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் சில்லறை விற்பனையாளர் களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் அது தெரிவித்துள்ளது.

உலகின் முதலாவது டெங்கு தடுப்பு மருந்தான  டெங்க்வெக்ஸியா , டெங்கு நோயினால் பாதிக்கப்படாதவர்களுக்கு சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டதையடுத்து, பிலி்ப்பைன்ஸ் சுகாதாரத் திணைக்களம் தடுப்பு மருந்தேற்றும் செயற்திட்டத்தை இடைநிறுத்தி வைத்துள்ளது.

மருந்து தொடர்பான மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சனோபி கூறியுள்ளது. நேற்று முன் தினம் ஊடகவியலாளர்களிடம் பேசிய டெங்க்வெக்ஸியா சர்வதேச நிறுவனத் தலைவர் சூ பெயிங், வாலிப வயதை அடையும்போது 10 பிலிப்பைன்ஸ் பிரஜைகளில் 9 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்படுவதாலும் ஆனால் அவர்களில் மூன்றில் இருவரில் நோய் அறிகுறிகள் தென்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஒரு தடவை இந்தத் தடுப்பு மருந்தை உடலில் செலுத்தினால் டெங்கு நோய் மீண்டும் அவர்களைத் தாக்காது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். டெங்கு நோயினால் உலகம் முழுவதும் வருடாவருடம் 400 மில்லியன் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

டெங்கு வைரஸ்களில் 4 வகைகள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது வகை வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நோய் மீண்டும் ஏற்படுவதில்லை. ஆனால், ஏனைய வைரஸினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடும் இரத்தப்பெருக்குடனான காய்ச்சல் ஏற்படும்.

பிலிப்பைன்ஸில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பு மருந்து ஏற்றும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த மாதம் 7 ஆம் திகதி வரை அங்கு 730, 000 சிறுவர் களுக்கு இந்த மருந்து ஏற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்தி:

730,000 சிறார்களுக்கு செலுத்தப்பட்ட டெங்கு தடுப்பு மருந்து தொடர்­பாக பிலிப்பைன்ஸ் அரசு விசா­ரணை

(Visited 26 times, 1 visits today)

Post Author: metro