விளையாட்டுத்துறை அமைச்சரின் அங்கீகாரம் கிடைக்காததால் விமான நிலையம் சென்ற வீரர்கள் வீடுகளுக்கு திரும்பினர்

இந்தியாவுக்கு எதிராக டிசம்பர் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் இடம்பெறும் ஒரு தொகுதியினர் இந்தியா செல்லும் பொருட்டு பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு திங்கள் இரவு சென்றபோதிலும் அவர்கள் மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்ப நேரிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவித்தது.

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ள போதிலும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரி ஒருவர் திங்கள் இரவு தெரிவித்தார்.

அமைச்சரின் அங்கீகாரம் இல்லாமல் எவ்வாறு ஒன்பது வீரர்கள் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்கள் என்பது புரியாத புதிராக இருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சரின் ஆலோசனைக்கு அமையவே விமான நிலையம் சென்ற வீரர்களை திருப்பி அழைத்ததாக மற்றொரு கிரிக்கெட் நிறுவன அதிகாரி நேற்றக் காலை தெரிவித்தார்.
தெரிவாளர்களினால் தெரிவு செய்யப்பட்ட குழாம் குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுவினர் திருப்தி கொள்ளாதது மற்றொரு காரணம் என அந்த அதிகாரி மேலும் கூறினார்.

அப்படியெனில் திருப்திகொள்ளப்படாத குழாம் எவ்வாறு அமைச்சரின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கபட்டது என்ற கேள்வி கிரிக்கெட் விமர்சகர்களால் எழுப்பப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கின்றது.

திங்கள் இரவு 8.30 மணிக்குப் பின்னர் விமான நிலையம் சென்ற வீரர்கள் திருப்பி அழைக்கப்பட்டு நள்ளிரவுக்குப் பின்னர் தங்களது சொந்த வீடுகளை சென்றடைந்தனர்.

இந் நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக பெயரிடப்படும் இங்குள்ள இலங்கை வீரர்கள் எப்போது இநதியா பயணமாவர்கள் என குறிப்பிட்ட அதிகாரியிடம் கேட்டபோது, அமைச்சரின் அங்கீகாரம் கிடைத்ததும் பயணமாவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் மிகவும் பொறுப்புவாய்ந்த பதவியில் உள்ள ஒருவர் தன்னிச்சையாக முடிவு எடுத்து வீரர்களை விமான நிலையத்துக்கு அனுப்பிவைத்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் வீரர்கள் விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட விடயத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால அறிந்திருக்கவில்லை என வெளியாகும் தகவல் கிரிக்கெட் விமர்சகர்களை திகைக்க வைத்துள்ளது.

(Visited 91 times, 1 visits today)

Post Author: metro