கணவனை பிரிந்து வந்து பலருடன் கள்ளத்தொடர்பு: துணியால் கழுத்தை இறுக்கி இளம்பெண் படுகொலை

கணவனை பிரிந்து சென்னைக்கு வந்த இளம்பெண், பலருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. ஓராண்டுக்கு பிறகு அவரது சடலம் கிணற்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கொலை தொடர்பில் கரூர் மாவட்ட பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரூர் மாவட்டம், ஏமூர் அருகேயுள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் தனது 28 வயதான மனைவி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தகராறு ஏற்பட்டு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கடந்த 2015ஆம் ஆண்டு இளையராஜாவின் மனைவி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இளையராஜா மனைவியை கண்டுபிடித்து தரும்படி கரூர் மாவட்டம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, கரூரில் இருந்து சென்னை சென்ற இளையராஜாவின் மனைவி சென்னை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் முச்சக்கரவண்டி சாரதியான ராஜா (வயது 30) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அவருடன் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்ததுடன் அவருடன் இருந்து கொண்டே சிறிய வாடிக்கையாளர்கள் மூலம் பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

சில மாதங்களில் ராஜாவை பிரிந்து இரும்புலியூர் ஏரிக்கரைப் பகுதியை சேர்ந்த மற்றொரு முச்சக்கரவண்டி சாரதியான மாணிக்கம் (வயது 28) என்பவருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளதையடுத்து, அவருடன் தங்கி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். சிறிது காலத்தில் மாணிக்கத்தையும் பிரிந்து மறைமலை நகர் பகுதியிலுள்ள மற்றொரு முச்சக்கரவண்டி சாரதியான கிஷோர் (வயது 30) என்பவருடன் குறித்த பெண் குடும்பம் நடத்த ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் அந்தப் பெண் மறைமலைநகரில் புது காதலனான கிஷோர் வீட்டுக்கு செல்வதற்காக தனது உடைமைகள் சிலவற்றை எடுத்துச் செல்வதற்காக இரும்புலியூர் ஏரிக்கரையிலுள்ள கள்ளக்காதலன் மாணிக்கம் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த தகவலை தெரிந்துகொண்ட மாணிக்கமும், ராஜாவும் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு ராஜா மாடியில் ஒளிந்து கொள்ள, மாணிக்கம் வீட்டுக்குள் சென்று குறித்த பெண்ணுடன் மது குடித்துள்ளார். அப்போது, தன்னை விட்டு பிரிந்து போகக் கூடாது என மாணிக்கம் மிரட்டியுள்ளார். இதன் காரணமாக, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே, மாடியில் பதுங்கியிருந்த ராஜா வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம், ராஜா இருவரும் சேர்ந்து துணியால் கழுத்தை இறுக்கி அப்பெண்ணை கொலை செய்துள்ளனர். பிறகு அவரது சடலத்தை முடிச்சூர் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து, புதிய கள்ளக்காதலனான கிஷோர் என்பவரிடம் அப்பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய விவரத்தை தெரிவித்துள்ளனர். உடனே அவர், கிணற்றில் வீசிய சடலம் வெளியில் வந்தால் மாட்டிக் கொள்வீர்கள். கல்லை கட்டிப் போட்டிருக்கலாமே என யோசனை தெரிவித்துள்ளார்.
அதன்பிறகே, கிணற்றின் அருகே காத்திருந்து சடலம் மிதந்து வெளியே வந்ததும் அந்த பகுதியில் இருந்த கல்லை எடுத்து சடலத்தை கட்டிப் போட்டு தண்ணீரில் தள்ளி விட்டு ஒன்றும் தெரியாதது போல வாழ்க்கையை தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இளையராஜாவின் மனைவி தொடர்பாக சென்னை மாநகர பொலிஸார் உதவியுடன் வெள்ளியனை பொலிஸார் விசாரணை நடத்தி முச்சக்கரவண்டி சாரதிகளான மாணிக்கம், ராஜா, கிஷோர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

அப்போது, அப்பெண் தங்களுடன் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததால் அதில் நிறைய சம்பாதித்து வந்தோம். ஆனால் அவர் பலருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதுடன், புதிய கள்ளக்காதலனான கிஷோர் வீட்டுக்கு செல்வதாக கூறியதால் ஆத்திரமடைந்து கொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர். மேலும், மாணிக்கம், ராஜா ஆகிய இருவரும் அப்பெண்ணை கொலை செய்து வீசப்பட்ட கிணற்றை அடையாளம் காட்டியுள்ளனர்.

தீயணைப்பு படையினரின் உதவியுடன் முடிச்சூர் நகரில் அடைக்கப்பட்டிருந்த கிணற்றிலிருந்து, தண்ணீர் மோட்டரால் இறைக்கப்பட்டு கிணற்றில் கிடந்த அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. அந்த உடலை மருத்துவ கல்லூரி டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்து, தடயவியல் துறைக்கு மரபணு பரிசோதனைக்காக பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாணிக்கம், ராஜா, கிஷோர் ஆகியோரை கரூர் மாவட்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 122 times, 1 visits today)

Post Author: metro