டி வில்லியர்ஸ் விளையாடும் விதத்தை மதிக்கிறேன் ஆனால் அவரை ஆட்டமிழக்கச் செய்வதே முக்கியம் – விராத் கோஹ்லி

தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடர் ஏ. பி. டி வில்லியர்ஸுக்கும் விராத் கோஹ்லிக்கும் இடையிலான தொடராகப் பார்க்கப்படுகின்றது.
இரண்டு அணிகளினதும் ‘சுப்பர் ஸ்டார்’களான இவர்கள் இருவரும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சகவீரர்கள் நெருங்கிய நண்பர்களும் ஆவர்.

ஆனால், இருவரும் களத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கடும் போட்டி நிலவும் என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறினார்.

“ஏ பி எனது சிறந்த நண்பர். அவரது கிரிக்கெட் விளையாடும் விதத்தை மதிக்கிறேன். ஒரு மனிதராக அவரைப் பெரிதாக மதிக்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் எதிர்த்து விளையாடும்போது வரம்பு மீறமாட்டோம். எங்கள் இருவராலும் அப்படி செயற்படமுடியாது.

நினைத்தும் பார்க்க மாட்டோம். ஆனால், ஏ. பி. யை ஆட்டமிழக்கச் செய்வதே முக்கியம். எதிரணியினர் நானும் புஜரா?, ரஹானே ஆகியோரும் விளையாடும்போது இதேபோன்றுதான் நினைப்பார்கள் என நம்புகிறேன்” என்றார் கோஹ்லி.

எவ்வாறாயினும் தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடரை டி வில்லிர்ஸுக்கும் எனக்கும் இடையிலான தொடர் என்பதை ஏற்க முடியாது என தென் ஆபிரிக்க செய்தியாளர்களிடம் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

”தத்தமது அணி தொடரை வெற்றிகொள்வதற்காக இத் தொடரில் விளையாடும் ஒவ்வொருவரும் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பர். சிலர் அதிசிறந்த ஆற்றல்களைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் ஓரிருவர் திறமையை வெளிப்படுத்தினால் அது சிறப்பாகவே இருக்கும். எமது குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரும் வெற்றிக்கான தாகத்துடன் இருப்பதால் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறார்கள். அது பரபரப்பாக இருக்கும்” என விராத் கோஹ்லி குறிப்பிட்டார்.

தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கேப் டவுனில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின்றது.

(Visited 35 times, 1 visits today)

Post Author: metro