பாலியல் வல்லுறவுக்கு உள்ளானபோது பெண்கள் அணிந்திருந்த ஆடைகளை சேகரிக்கும் ஜெஸ்மின் பதீஜா

பெண்கள் பாலியல் கொடு­மைக்கு ஆளா­வ­தற்கு அவர்கள் அணியும் ஆடை தான் காரணம் என சிலர் கூறு­வ­துண்டு. பெண்கள் கவர்ச்­சி­யாக ஆடை அணி­வ­துதான் ஆண்­களின் பாலியல் இச்சை தூண்­டப்­பட கார­ண­மா­கி­றது என, பெண்­க­ளையே ஆண்கள் சிலர் குற்றம் சாட்­டு­கின்­றனர்.


இன்­றைய நாக­ரீக உலகில் பெண்கள் மற்­ற­வர்­களின் கவ­னத்தை கவரும் வகையில் வித வித­மான கவர்ச்­சி­யான ஆடை­களை அணி­வதை நாம் காணலாம். இவ்­வாறு பெண்கள் அணியும் ஆடை­களால் தங்­க­ளுக்கு தாங்­களே ஆபத்தை தேடிக் கொள்­கி­றார்கள் என்ற ஒரு வாதமும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், இக்­க­ருத்தை மறுக்­கிறார் இந்­தி­யாவின் பெங்­க­ளூரைச் சேர்ந்த பெண் ஆர்­வ­ல­ரான ஜெஸ்மின் பதீஜா. பெண்கள் பாலியல் ரீதியில் துன்­பு­றுத்­தப்­ப­டு­வ­தற்கு அவர்கள் அணியும் ஆடை கார­ண­மல்ல எனக் கூறும் அவர் அதை நிரூ­பிக்கும் வகையில் பெண்­களூ­ரி­லுள்ள தனது வீட்டின் ஒரு சிறிய அறையில் பாலியல் இம்­சைக்­குள்­ளாக்­கப்­பட்ட நேரம் பெண்கள் அணிந்­தி­ருந்த ஆடை­களை அவர் சேக­ரித்து வரு­கிறார்.

அவ­ரு­டைய அறையில் மாட்­டப்­பட்­டுள்ள ஆடை­களில் சாதாரண வெள்ளை ஆடை, நீச்­ச­லுடை, கவுண், பாட­சாலை சீருடை என பல­த­ரப்­பட்ட ஆடைகள் காணப்­ப­டு­கின்­றன. இவை அனைத்தும் எல்லாப் பெண்­க­ளுமே பாலியல் இம்­சைக்கும் வன்­மு­றைக்கும் உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்கள் என்ற உண்­மையை படம்­பி­டித்துக் காட்­டு­கின்­றன.


பெண்கள் மீதான பாலியல் கொடுமை மற்றும் வன்­மு­றைக்கு எதி­ரான ஒரு பிர­சார இயக்­கத்தை பதீஜா ஆரம்­பித்­துள்ளார். தான் பெங்­க­ளூரில் கலை பயின்று கொண்­டி­ருந்­த­போது தனக்கு பாது­காப்­புக்கு யாரும் இருக்­க­வில்லை அவர் கூறு­கிறார்.

இள­வ­யது ஆண்கள் பெண்­களை தெருக்­களில் சீண்டி விளை­யா­டு­வது ஒரு சாதா­ரண விட­ய­மாக பார்க்­கப்­பட்ட கால­கட்டம் அது. பாலியல் கொடுமை சம்­ப­வங்கள் மறுக்­கப்­பட்­டதும் அதை அனு­ப­வித்­த­வர்கள் அமை­தி­யாக சகித்துக் கொண்­டி­ருந்­ததும் அத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெறக் கார­ண­மா­கின. எனவே, பெண்­க­ளுக்கு எதி­ரான பாலியல் கொடு­மையைச் சுற்­றி­யுள்ள அமை­தியை உடைத்­தெ­றியும் நோக்­கத்­துடன் பதீஜா மூன்று பெண்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டினார்.

பாலியல் கொடு­மைக்கு ஆளாக்­கப்­பட்ட சில பெண்­க­ளிடம் அவர்­க­ளது அனு­ப­வத்தைப் பதீஜா திரட்­டினார். அதைத் தொடர்ந்து பாதிக்­கப்­பட்ட பெண்கள் தங்­களை துன்­பு­றுத்­திய ஆண்­களின் பெயர்கள், வயது, சம்­பவம் உட்­பட பல விட­யங்­களை ஒரு வெள்ளைப் பல­கையில் எழுதிக் காட்­டினர்.


பாலியல் கொடுமை பற்றி எவ­ரா­வது கேள்வி கேட்டால் பெண்கள் இச்­சையைத் தூண்டும் வகையில் சதை தெரிய ஆடை அணிந்­தி­ருப்­பார்கள், இரவில் வெகு நேரம் வெளியில் சென்­றி­ருப்­பார்கள், மது அருந்­தி­யி­ருப்­பார்கள் அல்­லது ஆண் நண்­பர்­க­ளுடன் உல்­லாசம் அனு­ப­விக்க சென்­றி­ருப்­பார்கள் எனத் தங்­க­ளையே அவர்கள் குற்றம் சுமத்­தி­ய­தா­கவும் அந்தப் பெண்கள் தெரி­வித்­தனர்.
இதன்­போது பாதிக்­கப்­பட்ட பெண்­களில் 14, 16 வய­து­டைய பெண்­களும் 40 மற்றும் அதற்கும் மேற்­பட்ட பெண்­களும் இருந்­த­தாகத் தெரிய வந்­தது.

பாதிக்­கப்­பட்ட பெண்கள் பலர் நாங்கள் ஸ்கேர்ட் அணிந்­தி­ருந்தோம், ஜீன்ஸ் அணிந்­தி­ருந்தோம், பாட­சாலை சீருடை அணிந்­தி­ருந்தோம் என்று சொன்­னார்கள். அப்­ப­டி­யென்றால் பெண்கள் தாமா­கவே ஆபத்தை தேடிக் கொள்ளும் வகையில் ஆடை அணி­கி­றார்­களா எனக் கேட்டால் இல்லை என்று அழுத்­த­மாக பதில் சொல்கிறார் பதீஜா.

(Visited 289 times, 1 visits today)

Post Author: metro