5 நிமிடங்களில் முடிவுக்கு வந்த திருமணம்; இலட்சங்களைப் பறிகொடுத்து ஏமாந்த மணமகன்!

நீண்ட காலமாக திருமணமாகாத நபர் ஒருவருக்கு நடைபெற்ற திருமணம் 5 நிமிடங்களில் முடிவுக்கு வந்துள்ளதுடன், இலட்சங்களை பறிகொடுத்த சம்பவமொன்று இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது, ராஜஸ்தானைச் சேர்ந்த சஜ்ஜன்சிக்குக்கு நீண்ட காலமாக பொருத்தமான வரன் அமையவில்லை. அவரது குடும்பத்தாருக்கும் அவருக்குரிய பொருத்தமான மணமகளைத் தேடிக் கண்டுபிடித்து கொடுப்பதற்கு முடியவில்லை. இதனால் தனக்கு திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறதே என சஜ்ஜன்சிக் கவலையில் இருந்து வந்துள்ளார்.

அதை அறிந்து கொண்ட ஏமாற்றுக் கும்பல் ஒன்று சஜ்ஜன்சிக்கை ஏமாற்றத் திட்டம் தீட்டியுள்ளது. அதன்படி தரகரான பெண்ணொருவர் மூலமாக பெண்ணொருவரை சஜ்ஜன்சிக்குக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருமணப் பரிந்துரை உதவிக்காக அந்த தரகர் பெண்ணுக்கு 50,000 ரூபாவும், அவளுடன் இருந்த முகேஷ் என்ற நபருக்கு 2 இலட்சம் ரூபாவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. குறித்த பணத்தை திருமணத்துக்கு பின்னர் அவர்களுக்கு கொடுப்பதற்கு சஜ்ஜன் ஒப்புக் கொண்டுள்ளார்.

பேசியபடி சஜ்ஜனுக்கும் குறித்த மணமகளுக்கும் டிசம்பர் 30ஆம் திகதியன்று திருமணம் நடந்தேறியது. இதனையடுத்து, முன்னரே ஒப்புக்கொண்டபடி பேசிய தொகையும் தரகர் பெண் மற்றும் முகேஷ் கைகளுக்கு மாறியுள்ளது. தொகையை பெற்றுக் கொண்ட அடுத்த நொடியே தரகர் பெண்ணும் முகேஷ் என்ற நபரும் பல காரணங்களைக் கூறி அங்கிருந்து தப்பியுள்ளனர்.

சஜ்ஜன், தன் புது மனைவியுடன் தனது ஊருக்குச் செல்லும் பயணத்தை ஆரம்பித்துள்ளார். மணப்பெண்ணும், மணமகனும் காரில் ஏறிச் சென்று கொண்டி ருக்கும்போது, திடீரென சஜ்ஜனுடைய புது மனைவி செல்லும் வழியில் பொலிஸாரைக் கண்டதும், தன்னை இவர்கள் கடத்திச் செல்வதாகக் கூறி கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.

வாகனத்தை மடக்கிப் பிடித்த பொலிஸார், இது குறித்து விசாரித்துள்ளனர். இதன்போது அந்த மணப் பெண்ணின் உண்மையான பெயர் மாற்றப்பட்டிருந்ததுடன், அவளுக்கு முன்பே திருமணமாகி தற்போது இரு குழந்தைகளும் இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ளத்தான் அந்தப் பெண் 10,000 ரூபா பெற்றுக் கொண்டு இப்படி ஒரு பொம்மைக் கல்யாண நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் அந்தப் பெண் பொலிஸ் விசாரணையில் தெரிவித்ததாவது, இந்தத் திருமணத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நடிக்க வேண்டிய வேலை இருந்திருக்கிறதாகவும் இந்த நாடகத்துக்காக எனக்கு 10,000 ரூபா பேசி மணமகள் போல் நடிக்கக் கூறியிருந்தார்கள். அதன்படி 10 நிமிடத்தில் குறித்த கல்யாண நாடகம் முடிந்துவிடும் அப்போது தப்பி விடலாம் என்று எண்ணினேன். ஆனால் சஜ்ஜன் என் கரங்களை விடாது பிடித்துக் கொண்டு ஊருக்கு அழைத்து செல்ல காரில் ஏறியதும் அதிர்ந்து போனேன்.

மேலும் எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் இந்தத் திருமணத்தால் ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற அச்சத்தில் பொலிஸாரைக் கண்டதும் பாதுகாப்புக் கேட்டு கூச்சலிட ஆரம்பித்து விட்டேன் எனக் கூறியுள்ளார். இந்த நிலையில், சஜ்ஜன் “தனது இலட்ச பணமும் பறிபோயுள்ளதாகவும், நடந்த கல்யாணமும் பொய்க்கல்யாணம் என்றாகி விட்டதாகவும் இது குறித்து விசாரணை நடத்துமாறும் ராஜஸ்தான் பொலிஸில் முறைப்பாடு மனு கொடுத்துள்ளார்.

வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்தியாவிலும் நீண்ட காலமாக திருமணமாகாமல், திருமண ஏக்கத்திலிருக்கும் வசதி படைத்த ஆண்களை திட்டமிட்டு ஏமாற்றி இப்படி நாடகத் திருமணங்கள் நடத்தி வைத்துப் பணம் பறிக்கும் திட்டத்தோடு சில கும்பல்கள் களமிறங்கியுள்ளன.
அத்துடன், சஜ்ஜனின் முறைப்பாட்டின் பேரில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை.

அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே, திருமண ஏக்கத்தில் இருக்கும் இளைஞர்களே, மணமகளைத் தேடுவதில் மட்டுமல்ல, திருமணம் செய்து கொள்வதிலும் உஷாராக இருங்கள்.  அறியாத நபர்களை நம்பி வகையாக மாட்டிக் கொண்டு பணத்தோடு சேர்த்து நிம்மதியையும் பறிகொடுத்து ஏமாந்து போகாதீர்கள் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 62 times, 1 visits today)

Post Author: metro