தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தனது கட்அவுட்டிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் கூறிய தாய்லாந்து பிரதமர்

தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை தனது கட்அவுட்டிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சா. கூறியதுடன், ஒலிவாங்கிக்கு (மைக்) முன்னால் தனது கட் அவுட்டை விட்டுச் சென்ற சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.


முன்னாள் இராணுவ அதிகாரியான பிரயுத் சான் ஒச்சா, 2014 ஆம் ஆண்டு இரத்தம்சிந்தா புரட்சியொன்றின் மூலம் தாய்லாந்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை சிறுவர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஒச்சாவின் பல்வேறு போஸ்கள் கொண்ட கட்அவுட்டுகள் பிரதான அரசாங்கக் கட்டடத்தைச் சூழவுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிறுவர் தினம் தொடர்பாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் பிரயுத் சான் ஒச்சா பங்குபற்றினார்.


பிரதமர் பிரயுத் சான் ஒச்சா கோட் சூட் அணிந்த நிலையில் காணப்படும் கட் அவுட் ஒன்றும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து தன்னிடம் செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்பதை தவிர்க்க விரும்பிய பிரதமர் பிரயுத் சான் ஒச்சா, “கேள்விகளை இந்த நபரிடம் கேளுங்கள்” எனக் கூறி தனது கட் அவுட்டைக் காட்டிக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

இந்நடவடிக்கை செய்தியாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. எனினும், மனித உரிமை அமைப்புகள் இந்நடவடிக்கையை விமர்சித்துள்ளன.

(Visited 47 times, 1 visits today)

Post Author: metro