விண்­வெ­ளியில் தனது உயரம் 9 சென்­ரி­மீற்றர் அதி­க­ரித்­து­விட்­டதால் மீண்டும் பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு சிரமம் ஏற்­ப­டலாம் எனக் கூறிய ஜப்­பா­னிய விண்­வெளி வீரர்; பொய்­யான தகவல் என ஒப்­புக்­கொண்­ட­துடன் மன்­னிப்பும் கோரினார்

சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்ற பின்னர் தனது உயரம் வெகு­வாக அதி­க­ரித்­து­விட்­டதால் மீண்டும் பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு சிர­மப்­பட நேரி­டலாம் எனக் கூறிய ஜப்­பா­னிய விண்­வெளி வீரர் ஒருவர், இத்­த­கவல் தவ­றா­னது என ஒப்­புக்­கொண்­டுள்­ள­துடன், மன்­னிப்பும் கோரி­யுள்ளார்.


ஜப்­பா­னிய விண்­வெளி வீர­ரான நோரிஷிஜ் கனாய் (54), கடந்த டிசெம்பர் மாதம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்றார்.
அமெ­ரிக்க விண்­வெளி வீரர் ஸ்கொட் டிங்கிள், ரஷ்ய விண்­வெளி வீரர் அன்டன் ஷ்கப்­லெரோவ் ஆகி­யோ­ருடன் ஜப்­பானின் நோரிஷிஜ் கனாய் கடந்த டிசெம்பர் மாதம் கஸ­கஸ்­தா­னி­லி­ருந்து ரஷ்­யாவின் சோயுஸ் விண்­வெளி ஓடத்தின் மூலம் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்­துக்குச் சென்­றனர்.

6 மாத காலம் இவர்கள் சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் தங்­கி­யி­ருப்பர். இந்­நி­லையில், சர்­வ­தேவ விண்­வெளி நிலை­யத்­துக்கு வந்­த­வுடன் தனது உயரம் திடீ­ரென அதி­க­ரித்­து­விட்­ட­தாக ஜப்பானிய விண்­வெளி வீர­ரான நோரிஷிஜ் கனாய் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்தார்.


“சர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் எனது உய­ரம் அளக்­கப்­பட்­டது. 3 வாரங்­க­ளுக்குள் எனது உயரம் 9 சென்­ரி­மீற்றர் (3.5 அங்­குலம்) அதி­க­ரித்­து­விட்­டது. பாட­சாலைக் காலத்தில் தவிர இத்­த­கைய வளர்ச்­சியை நான் உணர்ந்­த­தில்லை.

(6 மாதங்­களின் பின்) பூமிக்குத் திரும்­பு­வ­தற்கு முயற்­சிக்கும் போது, சோயுஸ் விண் ஓடத்தில் உடலை திணிக்க முடி­யாமல் போகலாம் என சற்று கவ­லை­ய­டை­கிறேன்” என நோரிஷிஜ் கனாய் டுவிட்டர் மூலம் தெரி­வித்தார்.


விண்­வெ­ளியில் புவி­யீர்ப்பு அற்ற நிலை கார­ண­மாக விண்­வெளி வீரர்­களின் முது­கெ­லும்பு நீட்­சி­ய­டை­வதால் அவர்­களின் உயரம் 2 சென்­ரி­மீற்றர் வரை அதி­க­ரிப்­ப­தா­கவும் ஆனால், பூமிக்குத் திரும்­பி­ய­வுடன் அந்த உயர அதி­க­ரிப்பு மறைந்­து­விடும் எனவும் விஞ்­ஞா­னிகள் தெரி­வித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில், நோரிஷிஜ் கனாய் தனது உயரம் 9 சென்­ரி­மீற்­றர்கள் அதி­க­ரித்­துள்­ள­தாக கூறி­யதால் இது தொடர்­பான செய்­திகள் உலகின் பல நாடு­களின் ஊட­கங்­களில் வெளி­யா­கின. ஆனால், தனது உயரம் 9 சென்­றி­மீற்றர் அதி­க­ரித்­து­விட்­டது என தான் கூறி­யமை தவ­றா­னது என நேற்று முன்­தினம் அவர் ஒப்­பு­க்­கொண்டார்.

“பிழையான அளவீடு பெரும் விவகாரமாகி விட்டது. இந்த பொய்யான செய்திக்கு நான் மன்னிப்பு கோர வேண்டும்” என நோரிஷிஜ் கனாய் தெரிவித்துள்ளார். மேற்படி தவறான அளவீடு எவ்வாறு இடம்பெற்றது என்பது குறித்து அவர் விபரிக்கவில்லை.

(Visited 92 times, 1 visits today)

Post Author: metro