மத்­திய வங்­கி பிணை­முறி மோசடி தொடர்பில் அலோ­சியஸ், பலி­சேன சி.ஐ.டி யினால் கைது!

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நட்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர்பில் பேப்­ப­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்­தி­ரனின் மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ், குறித்த நிறு­வ­னத்தின் பிர­தம நிறை­வேற்றுப் பணிப்­பா­ள­ராக செயற்­பட்ட கசுன் பலி­சேன ஆகியோர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்றுக் கைது செய்­யப்­பட்­டனர்.

வெள்­ள­வத்தை, அர்­துசா வீதியில் உள்ள கசுன் பலி­சே­னவின் இல்­லத்தை நேற்று காலை 6.15 மணி­ய­ளவில் சுற்­றி­வ­ளைத்த குற்றப் புல­னாய் வுப் பிரி­வினர் சுமார் 45 நிமி­டங்­களின் பின்னர் 7.00 மணி­ய­ளவில் அவரைக் கைது, செய்­த­துடன் பின்னர் 7.45 மணி­ய­ளவில் கொள்­ளுப்­பிட்டி பிளவர் வீதியில் உள்ள அர்ஜுன் அலோ­சி­யஸின் வீட்டை சுற்­றி­வ­ளைத்து அவ­ரையும் கைது செய்­தனர்.

கைது செய்­யப்­பட்ட இரு­வரும் நேற்றுக் காலை 8.00 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்தின் நான்காம் மாடி கட்­டடத் தொகு­திக்கு அழைத்து வரப்­பட்ட நிலையில் அங்கு வைத்து பிணை­முறி மோசடி உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்த விசா­ர­ணைகள் நேற்று இரவு வரை நீடித்­தன. இந்­நி­லையில் கைதான இரு­வ­ரையும் கோட்டை நீதிவான் லங்க ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்ய குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்­தனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரே ஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ர த்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­க­ரவின் வழி நடத்­தலில் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் பி. அம்­பா­வல தலை­மையில் பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தர்­ம­லதா சஞ்­ஜீ­வனீ, பொலிஸ் சார்ஜன்ட் ஜய­வீர உள்­ளிட்ட சிறப்புக் குழு­வினர் இவ் ­வி­சா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந் நிலையில், இந்த விவ­கா­ரத்தில் முதல் சந்­தேக நப­ராக மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிங்­கப்பூர் பொலிஸார் ஊடாக கோட்டை நீதி­மன்றின், 15 ஆம் திக­திக்குள் சி.ஐ.டி.யில் ஆஜ­ராக வேண்டும் எனும் அறி­வித்­தலை அவ­ரது சிங்­கப்பூர் முக­வ­ரிக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

அதன்­படி அத்­தி­க­திக்குள் அவர் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரானால் அவர் பெரும்­பாலும் விசா­ர­ணையின் பின்னர் கைது செய்­யப்­ப­டலாம் எனவும் அவர் ஆஜ­ரா­காமல் இருந்தால் சர்­வ­தேச பொலிஸார் ஊடாக அவரைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் பொலிஸ் தலை­மை­யக உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது ஒரு போதும் வெளிப்­ப­டுத்த முடி­யாத நிதி விவ­காரம் தொடர்­பி­லான ரக­சிய தக­வல்கள் மத்­திய வங்­கியின் சில தரப்­பி­னரால் வெளியே வழங்­கப்­பட்­டுள்­ளதா என விசா­ரணை செய்­யு­மாறு கடந்த 2016 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்த முறைப்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பிணை­முறி விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இது தொடர்பில் செய்­யப்­பட்ட ஆரம்­ப­கட்ட விசா­ர­ணைகள் தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜன­வரி 10 ஆம் திகதி குற்றப் புல­னாய்வுப் பிரிவு சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னையைக் கோரி­யி­ருந்­தது.

இந் நிலையில் பிணை­முறி விநி­யோ­கத்தின் போது பல்­வேறு மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் சட்ட மா அதிபர் அவ­தா­னித்­துள்ள நிலையில் அது தொடர்பில் அவ­தானம் செலுத்தி, உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு சட்ட மா அதிபர் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அதன்­ப­டியே கடந்த 2 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அன்று பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் யசந்த கோதா­கொ­ட­வுடன் கோட்டை நீதி­மன்­றுக்கு சென்ற குற்றப் புல­னாய்வுப் பிரிவு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை முறை சட்டக் கோவையின் 109 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக முதல் அறிக்கையை நீதிவானுக்கு சமர்ப்பித்து, பிணை முறி விவகாரத்தின் சந்தேக நபர்களாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், அவரது மருமகன் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை குற்றப் புலனாய்வுப் பிரிவு பெயரிட்டது.

(Visited 46 times, 1 visits today)

Post Author: metro