சசிகலாவை ஓரம் கட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு டி.டி.வி.தினகரன் திட்டம்?

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிக்கப்பட்ட வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசி கலாவை ஓரங்கட்டி தனிக்கட்சி ஆரம்பிப்பதற்கு அவரது அக்கா மகனான டி.டி.வி.தினகரன் திட்ட மிட்டுள்ளதுடன், இது குறித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் முக்கிய ஆலோசனையும் நடத்தி யுள்ளார் என டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து தெரி வித்துள்ளதாவது, டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் பதவி பறிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமலிருப்பதற்கு முதல்வர் பழனிச்சாமி தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, டி.டி.வி.தினகரனையும், அவரது மைத்துனர் வெங்கடேசையும் ஒதுக்கி விட்டு, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களுடன் சமரசமாகி ஆட்சியை தக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த சிலரிடம் முதல்வர் பழனிச்சாமி தரப்பு இரகசிய பேச்சு நடத்திய தகவலும் வெளியாகியுள்ளது.

இதனால், அதிருப்தியடைந்துள்ள டி.டி.வி.தினகரன் தனக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் சிலருடன் சசிகலாவை தவிர்த்து விட்டு புதுக்கட்சியை ஆரம்பிக்கலாமா என ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது: புதுக்கட்சி ஆரம்பிப்பதற்கு டி.டி.வி.தினகரன் திட்டமிட்டிருந்தாலும், தற்போதைக்கு, அதற்கு உறுப்பினர்களை சேர்க்கும் திட்டம் ஏதுமில்லை. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பூத் கமிட்டிகளிலும் வாக்காளர் அட்டையுடன் கூடிய தலா 25 உறுப்பினர்களை தெரிவுசெய்து வருகிறோம்.

அவர்கள் வாயிலாக ஒவ்வொரு இளைஞர் குழுவிலும் 300 பேர் கொண்ட குழுக்களை அமைக்க உள்ளோம். ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் 250 இளைஞர் குழுவை உருவாக்குவோம். ஒவ்வொரு குழுவுக்கும், 300 பேர் என்றால் அவர்கள் வாயிலாக தொகுதிக்கு, 75 ஆயிரம் வாக்குகளைப் பெற முடியும். டி.டி.வி.தினகரன் புதுக்கட்சி ஆரம்பிக்கும்போது, இவர்களை எல்லாம் உறுப்பினர்களாகவும் சேர்க்க முற்படுவோம். அப்போது, தினகரனின் கட்சிக்கு பெரிய அளவில் மவுசு உருவாகும்.

அதேநேரத்தில் டி.டி.வி.தினகரன் புதுக்கட்சி துவக்கும் போது, சசிகலாவின் பெயரை கூறி வாக்கு கேட்கவோ, அரசியல் நடத்தவோ முடியாது. அதனால், புதிய கட்சியில் சசிகலாவின் பங்களிப்பு எதுவும் இருக்காது. அவரின் பெயரையும் தினகரன் பயன்படுத்தமாட்டார். அத்துடன், சசிகலா குடும்ப உறுப்பினர்கள் எவரது தலையீடும் கட்சியில் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், தனி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து, வலம் வந்து கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனின் தம்பியான பாஸ்கரன் நேற்று கூறியதாவது, பந்தயத்தில் யார் முந்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவர். என் குருவான எம்.ஜி.ஆர். ஆன்மா யாரை துாக்கி நிறுத்துகிறதோ அவர் தான் தலைவராக முடியும். எம்.ஜி.ஆரின் உண்மையான தொண்டன் தான் மக்களின் மனதில் தலைவராக நிற்க முடியும்.

எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் என் பாசறையை சேர்ந்தவர்கள் போட்டியிடுவர். நான் சென்னை அல்லது ஆண்டிபட்டியில் போட்டியிடுவேன். எல்லோரையும் ஒன்றாக இணைத்து, அ.தி.மு.க.வை மீட்டு வழி நடத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
(நன்றி: தினமலர்)

(Visited 9 times, 1 visits today)

Post Author: metro