யுவதியைக் காதலித்து நிதி மோசடி செய்தமைக்காக வானொலி அறிவிப்பாளருக்கு ஒரு வருட சிறை!

(எம்.எப்.எம்.பஸீர்)


Gavel-615 யுவதி ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்து  கோட்டை பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று உத்தரவிட்டார். அத்துடன் 1,500 ரூபா அபராதம் செலுத்தவும் அவர் உத்தரவிட்டார்.  

தனியார் வானொலி அலைவரிசை ஒன்றின் அறிவிப்பாளரான சந்திரமோகன் பரமலிங்கம் என்பவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து காதலித்ததாகவும் இதன்போது தான் மேற்படிப்புக்கு லண்டன்  சென்றதாகவும் அங்கு இருந்த காலப்பகுதியில் சுமார் 23 இலட்சம் ரூபாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த அறிவிப்பாளருக்கு வழங்கியதாகவும் எனினும் இறுதியில் நம்பிக்கை மோசடி செய்து அவர் காதல் நாடகமாடி பண மோசடி செய்துள்ளதாகவும் பொலிஸ் மோசடி தடுப்புப் பிரிவில் யுவதி ஒருவர் முறைப்பாடு செய்திருந்தார்.


இது தொடர்பில் விசாரணை  செய்த பொலிஸ் மோசடி தடுப்புப் பிரிவு குறித்த விவகாரம் தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தது. இதன்போது குறித்த அறிவிப்பாளர் ஏழரை இலட்சம் ரூபாவை மீள அந்த யுவதிக்கு செலுத்தியிருந்தமை தெரியவந்தது.

இந் நிலையில் வழக்கு விசாரணை ஆரம்பமானபோது,  சாட்சி விசாரணைகளிடையே 23 இலட்சம் ரூபா பணம் குறித்த யுவதியினால் அறிவிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளமை வங்கி சாட்சிகள் ஊடாக நீதிவானிடம் உறுதி செய்யப்ப்ட்டது.

 எனினும் அறிவிப்பாளர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் தாம் பெற்ற பணத்தில் ஏழரை இலட்சம் ரூபாவை கொடுத்த பின்னர் எஞ்சிய தொகையில் ஒரு மில்லியன் ரூபாவை ஏற்கனவே செலுத்திவிட்டதாக வாதிட்டனர். எனினும் அதற்கான சாட்சிகளை இல்லாத நிலையில் மன்று அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இந்த மோசடி விவகாரத்தில் குறித்த அறிவிப்பாளரை குற்றவாளியாக கண்ட கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, நேற்று அது தொடர்பிலான தீர்ப்பினை அறிவிக்க வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொன்டார்.

இதன்போது, குறித்த அறிவிப்பாளர் தரப்பில் 4 இலட்சம் ரூபா பணம் நேற்று குறித்த யுவதிக்கு வழங்கப்பட்டதுடன் இதனை சுட்டிக்காட்டி இலகு தண்டனை ஒன்றினை வழங்குமாறு அறிவிப்பாளரின் தரப்பு சட்டத்தரணிகள் கோரினர்.

எனினும் பாதிக்கப்பட்ட தரப்பான யுவதி சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கமல் சுமித் பெரேரா, இலகு தண்டனை வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார். கடும் தண்டனை வழங்கப்படாதவிடத்து குறித்த அறிவிப்பாளர் செய்த செயல் அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் அவமதிப்பை பெற்றுக்கொடுப்பதாகவே அமையும் எனவும் எனவே இனிமேல்  இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதைத் தடுக்க கடும் தண்டனை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து தண்டனையை அறிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன குற்றவாளியாக காணப்பட்ட அறிவிப்பாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்ததுடன் 1,500 ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

(Visited 862 times, 1 visits today)

Post Author: metro