139ஆவது றோயல் – தோமா பெருஞ்­ச­மரில் முடி­வில்லை

(எஸ்.எஸ்.சி. அரங்­கி­லி­ருந்து நெவில் அன்­தனி)

கொழும்பு றோயல் அணிக்கும் கல்­கிஸை பரி. தோமாவின் அணிக்கும் இடையில் எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெற்ற 139ஆவது நீல­வர்­ணங்­களின் மூன்று நாள் மாபெரும் கிரிக்கெட் சமர் வெற்­றி­தோல்­வி­யின்றி நேற்று முடி­வ­டைந்­தது.

எனினும் சிலவருடங்களுக்கு முன்னர் றோயல் வெற்றிபெற்றிருந்த தால் டி.எஸ். சேனாநாயக்க ஞாபகார்த்த கேடயம் றோயலுக்கு மீண்டும் சொந்தமானது.

இப் போட்­டியில் வெற்­றி­பெ­று­வ­தற்கு றோயல் அணிக்கு 48 ஓவர்­களில் 227 ஓட்­டங்கள் என்ற இலக்கு பரி. தோமாவின் அணி­யினால் நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

கடி­ன­மான இந்த இலக்கை நோக்கி இரண்­டா­வது இன்­னிங்ஸில் துடுப்­பெ­டுத்­தா­டிய றோயல் அணி போதிய வெளிச்­ச­மின்மை கார­ண­மாக ஆட்டம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது 42 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 143 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

ஒரு கட்­டத்தில் 50 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களை இழந்து தடு­மா­றிக்­கொண்­டி­ருந்த றோயல் அணிக்கு கவிந்து மது­ரா­சிங்­கவும் தெவிந்து சேன­ரத்­னவும் (24 ஓட்­டங்கள்) ஆறா­வது விக்­கெட்டில் பகிர்ந்த 56 ஓட்­டங்கள் தெம்­பூட்­டி­ன. கவிந்து மதா­ர­சிங்க 9 பவுண்ட்­றிக­ளுடன் 58 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார். மனுல பெரேரா 9 ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார்.

பந்­து­வீச்சில் டிலொன் பீரிஸ் 50 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். முத­லா­வது இன்­னிங்ஸில் இரண்டு அணி­களும் துடுப்­பாட்­டத்தில் பிர­கா­சிக்கத் தவற குறைந்த மொத்த எண்­ணிக்­கை­களே பெறப்­பட்­டன.
வெள்­ளி­யன்று ஆரம்­ப­மான இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பரி. தோமாவின் அணி 9 விக்­கெட்­களை இழந்து 166 ஓட்­டங்கள் பெற்­றி­ருந்­த­போது முத­லா­வது இன்­னிங்ஸை நிறுத்­திக்­கொண்­டது.

துடுப்­பாட்­டத்தில் சித்­தார ஹப்­பு­ஹின்ன (34), மன்­தில விஜே­ரட்ன (24) ஆகிய இரு­வரே 20 ஓட்­டங்­க­ளுக்கு மேல் பெற்­றனர்.

சுழல்­பந்­து­வீச்­சாளர் மனுல பெரேரா 43 ஓட்­டங்­க­ளுக்கு 5 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய றோயல் அணி 33 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்கள் என்ற நிலை­யி­லி­ருந்து இரண்டாம் நாள் தொடர்ந்து துடுப்­பெ­டுத்­தாடி சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 178 ஓட்­டங்­களைப் பெற்­றது. அணித் தலைவர் பசிந்து சூரி­ய­பண்­டார (46), கவிந்து மத­ர­சிங்க, (37) டிமல் விஜே­சே­கர (26) ஆகியோர் துடுப்­பாட்­டத்தில் திற­மையை வெளிப்­ப­டுத்­தினர்.

இரண்டாம் நாள் ஆட்டம் சீரற்ற கால­நி­லை, போதிய வெளிச்­ச­மின்மை கார­ண­மாக முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது பரி. தோமாவின் அணி இரண்­டா­வது இன்­னிங்ஸில் விக்கெட் இழப்­பின்றி 3 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­தது.

மூன்றாம் நாளான நேற்­றுக்­காலை தனது இரண்­டா­வது இன்­னிங்ஸைத் தொடர்ந்த பரி. தோமாவின் அணி 6 விக்­கெட்­களை இழந்து 227 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது துடுப்­பாட்­டத்தை நிறுத்­திக்­கொண்­டது.

துடுப்­பாட்­டத்தில் துலித் குண­ரட்ன 59 ஓட்­டங்­க­ளையும் சலின் டி மெல் 57 ஓட்டங்களையும் பெற்றுதுடன் இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இவர்களைவிட 3ஆம் இலக்க வீரர் சித்தார ஹப்புஹின்னோ 47 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மனுல பெரேரா 45 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

(Visited 16 times, 1 visits today)

Post Author: metro