சுதந்திரக் கிண்ண கிரிக்கெட்: இலங்கைக்கு பதிலடி கொடுத்தது இந்தியா

 

 

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து  நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கெத்தாராம, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற சுதந்திரக் கிண்ண (நிதாஹஸ் ட்ரொப்பி மும்முனை சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டியில் இந்தியா 6 விக்கெட்களால் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.

இதன் மூலம் முதலாம் கட்டப் போட்டியில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 153 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்படுத்தாடிய இந்தியா 17.3 ஓவர்களில் .4 விக்கெட்களை மாத்திரம் இழந்து குறிப்பிட்ட வெற்றி இலக்கை அடைந்தது.

மாலையில் தொடர்ச்சியான மழைத்தூறல் காரணமாக 80 நிமிடங்கள் தாமதித்து ஆரம்பித்த நேற்றைய போட்டியில் அணிக்கு 19 ஓவர்கள் என போட்டி பொதுமத்தியஸ்தரால் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் தினேஷ் சந்திமாலுக்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டதால் அவருக்குப் பதிலாக திசர பெரேரா அணித் தலைவராக விளையாடியதுடன் வெள்ளியன்று நடைபெறவுள்ள போட்டிக்கும் தலைமை தாங்கவுள்ளார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா இலங்கையைப் போன்றே 5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அடுத்த 5 ஓவர்களில் மேலும் 2 விக்கெட்களை இழந்த இந்தியாவினால் மேலதிகமாக 38 ஓட்டங்களையே பெறமுடிந்தது.

எனினும் மனிஷ் பாண்டே (42 ஆ.இ.), தினேஷ் கார்த்திக் (39 ஆ.இ.) ஆகிய இருவரும் நிதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் துடுப்பெடுத்தாடி வீழ்த்தப்படாத 5ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இவர்களை விட சுரேஷ் ரெய்னா மாத்திரமே ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 27 ஓட்டங்களைப் பெற்றார்.

இலங்கை பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களைக் குவித்தபோதிலும் விக்கெட்கள் சரியத் தொடங்கியதும் மந்த கதியில் ஓட்டங்கள் பெறப்பட்டன.

ஆரம்ப வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 2.2 ஓவர்களில் 25 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். தனுஷ்க குணதிலக்கவும், இத் தொடரில் தனது முதல் இரண்டு போட்டிகளில் அரைச் சதங்களைக் குவித்த குசல் ஜனித் பெரேராவும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தமை இலங்கை அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தது.

எனினும் குசல் மெண்டிஸும் உப்புல் தரங்கவும் மூன்றாவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணிக்கு தெம்பூட்டினர்.

அதன் பின்னர் இலங்கை அணி விக்கெட்களை சீரான இடைவெளிகளில் இழந்த வண்ணம் இருந்தது. குசல் மெண்டிஸ் திறமையாக துடுப்பெடுத்தாடி 31 பந்துகளில் 3 சிக்சர்கள், 3 பவுண்ட்றிகளுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார். இவரை விட உப்புல் தரங்க (22), தசுன் ஷானக்க (19), தனுஷ்க குணதிலக்க (17), திசர பெரேரா (15) ஆகியோரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்திருந்த இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. கடைசி 9 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 58 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

இந்திய பந்துவீ்சசில் ஷர்துல் தக்குர் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் வொஷிங்டன் சுந்தர் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆடடநாயகன் ஷர்துல் தக்குர்.

 

 

(Visited 27 times, 1 visits today)

Post Author: metro