என்னைக் காதலித்து ஏமாற்றியதால் கொலை செய்தேன்; இளம்பெண் கொலைவழக்கில் கைதான இளைஞன் வாக்குமூலம்

”என் காதலியை நன்றாக படிக்க வைத்து, திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். ஆனால், என்னைக் காதலித்து ஏமாற்றியதால், எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என நினைத்து, கொலை செய்தேன்,” என்று, இளம் பெண் கொலை வழக்கில் கைதான இளைஞன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கொலை குறித்து பொலிஸ் தரப்பில் கூறியதாவது தமிழகத்தின் சென்னை, மதுரவாயலை அடுத்த, ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவரது மனைவி தனது 19 வயது மகள், மகனுடன் வசித்து வந்துள்ளனர். மகள் தனியார் கல்லூரி ஒன்றில் பி.கொம். கற்று வந்துள்ளார்.

இவர்களின் வீட்டுக்கு அருகே வசித்தவர் அழகேசன் (வயது 25). இவரும், குறித்த பெண்ணும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அழகேசனை விட்டு பெண் விலகியுள்ளார்.

இதனையடுத்து பெண்ணை பின் தொடர்ந்த அழகேசன், காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். இது குறித்து பெண் அவரது தாயுடன், மதுரவாயல் பகுதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின்னர், ‘பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது.’ என எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த வாரம், இளம் பெண் படித்து வந்த கல்லூரிக்கு சென்ற அழகேசன், தன்னைக் காதலிக்கும்படி வலியுறுத்தியுள்ளார். அவர் மறுக்கவே, அழகேசன் தன் மீது பெற்றோலை ஊற்றிக் கொண்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்துள்ளார்.

அழகேசன், தன்னைத் தானே எரித்துக் கொள்ள முயன்ற போது, பொதுமக்கள் அவரைத் தடுத்துள்ளதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கே.கே.நகர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரச மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பொதுமக்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அழகேசனையும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை முடிந்து பொலிஸில் சாரணடைந்த அழகேசனிடம் விசாரித்துள்ளனர். இதன்போது அழகேசன் கூறியதாவது, “நானும் அந்தப் பெண்ணும் இரண்டு வருடங்களாக காதலித்தோம். இரண்டு குடும்பத்துக்கும் எங்களது காதல் விவகாரம் தெரியும்.

எனது காதலியிடம் தொலைபேசி இல்லாததால், அவரது தாயின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் அவளுடன் பேசுவேன். அவளது தாயும் என்னிடம் நன்றாகப் பேசுவார். சில தினங்களுக்கு முன்னர் எனது காதலிக்கு தொலைபேசி ஒன்றும் வாங்கிக் கொடுத்துள்ளேன். 10ஆம் வகுப்பு பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்றும், குடும்ப சூழல் காரணமாக, அவளால் தொடர்ந்து கல்வி கற்க முடியவில்லை.

இதனால், என் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து இரண்டு இலட்சம் ரூபா படிப்பு செலவுக்கு கொடுத்தேன். அவ்வப்போது, அவளுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்தேன். கல்லூரியில் சேர்ந்த பின், அவளிடம் மாற்றம் ஏற்பட்டது. என்னை விட்டு விலக ஆரம்பித்தாள்.

இதையடுத்து, அவள் வீட்டுக்கு சென்று, தாலி கட்டினேன். முதலில் மறுத்தாலும், அதன்பின் ஏற்றுக் கொண்டாள். சில மாதங்களில் அவர்களது உறவினர்கள் பேசி, அவள் மனதை மாற்றியுள்ளனர். இதனால் மீண்டும் அவள் என்னை விட்டு விலகினாள். அதுமட்டுமல்லாமல், என் மீது அவள் பொலிஸில் முறைப்பாடு செய்தாள்.

அப்போது, இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நான் படிக்காதவன் என்றும் கூறியதுடன் இவனை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்’ என, பொலிஸ் நிலையத்தில் கூறினாள். இதனையடுத்து பொலிஸார் எச்சரித்தனர். பின்னர், எனது காதலியை மறக்க நினைத்தேன்.

ஆனால், அவள் நினைவுகளும், அவள் என்னை ஏமாற்றியதும், என் நினைவுக்கு வந்தபடி இருந்தன. எனக்கு கிடைக்காதவள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது எனத் திட்டமிட்டு, கல்லூரிக்கு சென்றேன். கடைசி நிமிடம் வரை அவளிடம் கெஞ்சினேன்.

அப்போதும் அவள் திமிராக நடந்து கொண்டதால் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவளை குத்திக் கொலை செய்து, நானும் தீக்குளிக்க முயன்றேன்” என தனது வாக்கு மூலத்தில் கூறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அழகேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

(Visited 42 times, 1 visits today)

Post Author: metro