புதையலில் பெற்ற இரத்தினக்கல் எனக் கூறி அலங்காரக் கல்லை 6 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்த நபரை தேடும் பொலிஸ்

லக்கல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து புதையலில் பெற்ற இரத்தினக்கல் எனக்கூறி அலங்காரக் கல் ஒன்றை 6 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்து தப்பிச் சென்ற இராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நபர் இரத்தினக்கல் ஒன்றை தருவதாகக் கூறி போலியான கல் ஒன்றை வழங்கி மோசடி செய்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தில் 18 ஆம் திகதி பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு செய்ததுடன் போலியான கல்லையும் சந்தேக நபரால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையின் நிழற் பிரதி ஓன்றையும் ஒப்படைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது சம்பவ தினம் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அநுராதபுரத்துக்கு சென்றிருந்த போது சந்தேகநபர் தன்னுடன் பழகியதுடன் தனக்கு பெறுமதிமிக்க இரத்தினக்கல் ஒன்று கிடைத்துள்ளதாகவும் விருப்பமாயின் அதனைக் கொள்வனவு செய்யுமாறு தன்னிடம் தெரிவித்ததாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

முதலில் 10 இலட்சம் ரூபாவுக்கு அதனை தருவதாகக் கூறிய சந்தேகநபர், பின்னர் 6 இலட்சம் ரூபா வரை விலையை குறைத்துள்ளார். அதன்பின்னர் தான் எஹெலியகொடவிலுள்ள தனது உறவினரொருவருடன் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று 6 இலட்சம் ரூபாவை செலுத்தி இரத்தினக்கல்லை வாங்கிச் சென்றதாகவும் பின்னர் அதனை பரிசோதித்தபோது அது போலியானது என தெரியவந்ததாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபரைத்தேடி பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், சந்தேகநபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

(Visited 22 times, 1 visits today)

Post Author: metro