விஜய் ஆன்டனியின் காளி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இப்படம் 13 ஆம் திகதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில், இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.

தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் பிக்சர் பாக்ஸ் நிறுவனத்துக்கு ரூ 2 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை செலுத்தி படத்தை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

(Visited 41 times, 1 visits today)

Post Author: metronews 2