எரிந்து சாம்பலான ரோஹிங்யா அகதிகள் முகாம்; ஆவணங்களும் அழிந்தன!

டெல்லியில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகளின் முகாமில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் முகாம் முழுவதும் எரிந்து நாசமானது.

மியான்மர் நாட்டில் உள்ள ரோஹிங்யா முஸ்லீம் அகதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தினரும் புத்தமதத்தினரும் கொலை, பாலியல் தொல்லை போன்ற வன்முறைகளில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ரோஹிங்யா முஸ்லிம்கள் தங்கள் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு குடிபெயரத் தொடங்கினர். இதுவரை சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்த அகதிகளில் சிலர் இந்தியாவிலும் அனுமதிக்கப்பட்டு, டெல்லியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். டெல்லியின் தென்கிழக்குப் பகுதியான கலந்தி குஞ்ச் என்ற இடத்தில் ஒரு முகாம் அமைத்து அங்கு சுமார் 55 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் இவர்கள் தங்கியுள்ள முகாம்களில் திடீரென தீப்பிடித்தது. அவர்கள் அனைவரும் டென்ட்களில் தங்கவைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென மற்ற டென்ட்களுக்கும் பரவியது. தீயை உணர்ந்த மக்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 10 வண்டிகளின் மூலம் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக நடந்த விசாரணையில் அகதிகளின் டென்ட்களில் மின் கசிவின் காரணமாகத் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய அகதி ஒருவர், “மக்கள் அனைவரும் தீயிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டனர். அருகில் இருக்கும் மக்கள் எங்களுக்கு உணவுகளையும் உடைகளையும் வழங்கி வருகின்றனர். டெல்லி காவல் துறையினர் அதிகமாக உதவி செய்கிறார்கள். நாங்கள் தற்போது கொசுவலைகளுடன்கூடிய வேறொரு முகாமில் தங்கியிருக்கிறோம்’’ எனக் கூறினார். ரோஹிங்யா மக்கள் தற்போது தற்காலிகமாக வேறொரு டென்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிந்த முகாம்களில் இருந்த அகதிகளின் அனைத்து ஆவணங்களும் எரிந்து நாசமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 29 times, 1 visits today)

Post Author: metronews 3