காவிரி விவகாரம் தொடர்பான திரைத்துறையினரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தவில்லை – சிம்பு

 

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான திரைத்துறையினரின் போராட்டத்தை தாம் கொச்சைப்படுத்தவில்லை என்று நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக சிம்பு அளித்த பதில்களாவன,

கே: அரசியலுக்கு தயாராகி விட்டீர்களா?

ப: அரசியல் என்பது வேறு, அரசியல் செய்வது என்பது வேறு. அந்த அரசியலுக்குள் நடக்கும் அரசியலை அதை வெளியேற்ற வேண்டும்.

கே: தமிழகத்திற்கு தண்ணீர் வரவில்லை, அதற்கான போராட்டத்திற்கான போக்கை மாற்றுகிறாரா சிம்பு?

ப: நான் சொல்ல வந்ததை சில பேர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன், அது என் தவறு தான். இந்த விவகாரத்தில் சட்டரீதியாக உள்ள விஷயங்கள் எனக்கு தெரியாது. இது முதல்முறையாக நடக்கும் போராட்டம் இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் கிடையாது என்று கர்நாடகாவில் சொல்லி பிரசாரம் செய்தால் தான் ஓட்டு வாங்க முடியும் என்ற நிலை இருப்பது அனைவருக்குமே தெரியும். அந்த பிம்பத்தை மாற்ற வேண்டும். மாற்றும் பட்சத்தில் கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும். இங்கு போராட்டம் செய்பவர்களுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும். ஆனால் இங்கு நடக்கும் போராட்டங்களை தவறு என்று நான் கூறவில்லை.

கே: ரஜினி-கமலிடம் இல்லாத முதிர்ச்சி சிம்புவிடம் உள்ளதாக கர்நாடக நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அப்படியென்றால் ரஜினி-கமல் சரியாக செயல்படவில்லை என்று கூறுவதா?

ப: இது ஒரு தவறான கண்ணோட்டத்தை காட்டுகிறது. ரஜினி, கமல் ஏன் இந்த மாதிரியான ஒரு விடயத்தை சொல்லவில்லை என்று நீங்கள் கேட்பதே தவறான கேள்வி. அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலில் களமிறங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் அப்படி ஒரு விடயத்தை சொன்னால், நான் சொன்னதற்கே, என்னை தமிழன் இல்லை என்று விமர்சித்தார்கள். தமிழ்நாட்டில் பிறந்து இத்தனை ஆண்டுகள் தமிழில் பேசி, தமிழுக்காக போராடி, ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்த என்னை தமிழனா என்று கேட்கின்றனர். நான் தமிழனா, இந்தியனா என்றெல்லாம் எனக்கு தெரியாது, நான் ஒரு மனிதன். நான் ரஜினி, கமல் இருவரது கட்சியிலும் இல்லை. அவர்களால் அதை எடுத்து சொல்ல முடியாது. சொன்னால் அதை அரசியலாக திருப்பிவிடுவார்கள்.

கே: திரையுலகம் நடத்திய மவுனப் போராட்டத்தை சிம்பு கொச்சைப்படுத்திவிட்டாரா?

ப: போராட்டம் நடத்தியது சரி தான். மவுனப்போராட்டம் தான் தவறு என்று கூறுகிறேன். அவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது என்று தான் சொல்கிறேன். அவர்கள் நடத்திய போராட்டத்தை தவறு என்று கூறவில்லை.

கே: கர்நாடக மக்கள் நல்லவர்கள், தண்ணீர் தருவார்கள் என்று சொல்வது ஏற்புடையதா? அதனை ஏற்றுக் கொள்வார்களா?

ப: கூட்டத்தில் பெயர் வாங்குவதற்காக பேச வேண்டுமா? மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று பேச வேண்டுமா. அதில் ஏதாவது தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் எனது கருத்தை கூறினேன்.

 

(Visited 15 times, 1 visits today)

Post Author: metronews 3