இரவில் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்திற்கு

ரவு… மனிதர்கள் உறங்குவதற்கான நேரம்; இது இயற்கை நியதி. அதற்கு மாறாக, இரவில் வெகு நேரம் கண்விழித்து வேலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல’ திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் உண்மை. ஆனால், இன்றையச்சூழலில் பலருக்கும் இரவுப் பணி தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதோடு, இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கமும் சேர்ந்துகொள்கிறது. இது, மேலும் பல விபரீத விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், `நீண்ட நாள்களுக்கு இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது’ என்கிறது  சீனாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வு.

சீனாவின் செங்டூ நகரத்திலிருக்கிறது சிச்சுவான் பல்கலைக்கழகம் (Sichuan University). இதன் மேற்கு சீன மருத்துவ மையத்தில் (West China Medical Center) பணியாற்றுபவர் புற்றுநோய் நிபுணர் க்ஸ்யூலேய் மா ( Xuelei Ma). இவர் தலைமையில்தான் ‘நைட் ஷிஃப்ட்’ வேலை பார்ப்பவர்களுக்குப் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமிருக்கிறதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வட அமெரிக்கா, ஐரோப்பா,  ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 39,09,152 பேரிடம் ஆய்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் 19 சதவிகிதம் பேருக்குப் புற்றுநோய் இருந்ததும் கண்டறியப்பட்டது. முக்கியமாக, 11 வகையான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவிகிதம் பேருக்கு சருமப் புற்றுநோய், 32 சதவிகிதம் பேருக்கு மார்பகப் புற்றுநோய், 18 சதவிகிதம் பேருக்கு இரைப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இரவு பணிபுரிபவர்களுக்கு ஒவ்வோர் ஐந்து வருடத்துக்கும் புற்றுநோய் வரும் வாய்ப்பு 3.3 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது.

 

“இரவுப் பணி செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமா… அதை எப்படிக் கண்டறிவது… சிகிச்சை முறைகள் என்னென்ன..?’’ – சென்னை அரசு பொது மருத்துவமனை புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவர்  டாக்டர் கே.கலைச்செல்வியிடம் கேட்டோம்.

“முடி, நகம் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார்  ஒரு லட்சம் பெண்கள் ஆளாகிறார்கள். சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில்தான் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நீண்ட நாள்களுக்கு இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

நம் உடலில் தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துவது மெலடோனின் (Melatonin) ஹார்மோன். இந்த ஹார்மோன் இருட்டுச் சூழலில் மட்டுமே சுரக்கும். இரவில் விளக்கு வெளிச்சத்தில் பணிபுரியும்போது, உடலுக்குத் தேவையான மெலடோனின் ஹார்மோன் கிடைக்காமல் போகும். மேலும், வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதால், வைட்டமின் டி-யும் குறையும். இதனால் உடல்நலன் பாதிக்கப்படும்; மார்பகப் புற்றுநோயும் ஏற்படலாம்.

ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone), ‘ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) போன்ற பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் தவறான நேரத்தில், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகச் சுரப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்திருக்கிறது. இதனால்தான் ‘நைட் ஷிஃப்ட்‘ வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

(Visited 88 times, 1 visits today)

Post Author: A Rajeevan