சவுதியில் விதிக்கப்பட்ட வரியினால் இந்தியர்கள் வெளியேற்றம்…..!

 

சவுதி அரேபியா பல புதிய சட்டங்களை வகுத்து வருகின்றது. 13 ஆண்டுகள் கழித்து தற்போது சினிமா அரங்குகள் திறக்கப்பட்டு தமிழ் சினிமாவும் திரையிடப்பட்டது. பெண்களுக்கு முன்னுரிமையான விடயங்களையும் செய்து வருகின்றது.

அந்தவகையில் தற்போது புதிய சட்ட அறிவிப்பொன்று அறிவித்துள்ளது.
அதாவது, வீட்டில் வசிக்கும் தனி நபர் மீது குடியிருப்பு வரி விதிக்கப்படும் என்ற சவுதி அரேபியாவின் அறிவிப்பை அடுத்து, அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை தாயகம் அனுப்பி வருகின்றனர்.

ஐதராபாத் போன்ற நகர பள்ளிகளில் புதிதாக சேரும் சவுதி அரேபியா வாழ் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தாயகம் திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது. ஆனால், இதுவரை எவ்வளவு இந்தியர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் என்ற எண்ணிக்கை சரியாக தெரிய வரவில்லை.

ஏற்கனவே சவுதி அரசு ஒரு குடும்பத்திற்கு, ஓராண்டு அடிப்படையில் வரி விதித்து வந்தது. தற்போது இந்த வரியை தனி நபர் வரி என்று மாற்றி அமைத்துள்ளது. மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வரும் சவுதி அரசு, அந்த செலவை ஈடுகட்டும் வகையில் இந்த வரியை விதித்து வருகிறது.

இந்த வரியை சவுதி கடுமையாக உயர்த்தியுள்ளது. தற்போது குடும்பத்தில் இருக்கும் தனி நபர் ஒருவருக்கு 100 ரியாலாக அதாவது, இந்திய மதிப்பில் மாதத்திற்கு ரூ. 1,800 ஆக வசூலிக்க முடிவு செய்துள்ளது. இது வரும் ஜூலை மாதத்தில் இருந்து இரட்டிப்பாகிறது. அதாவது, 200 ரியால் ஆகிறது.

இதுவே அடுத்தாண்டு, ஜூலை 1ஆம் திகதி 300 ரியால் ஆகவும், 2020ல் ஜூலை 1ஆம் தேதி 400 ரியாலாகவும் உயர்த்தப்படுகிறது. 4 பேர் இருக்கும் குடும்பத்தில், ஜூலை 1ஆம் தேதி துவங்கி ஓராண்டுக்கு ரூ. 1.72 லட்சம் வரியாக மட்டும் செலுத்த வேண்டியது இருக்கும். இதுதான் இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான காரணம்.

ஐதராபாத்தில் இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அதிகளவில் சீட் வழங்கி வருகிறது. ஐதராபாத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்படும் அதே பாடங்கள்தான் சவுதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளில் இருக்கும் பள்ளிகளில் பின்பற்றப்படுகிறது.

சவுதி அரேபியாவில் 32.5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 40 சதவீதம் கேரளாவில் இருந்து சென்றவர்கள். 20-25 சதவீதம் தெலுங்கானா மக்கள். தெலுங்கானாவில் இருந்து சென்றவர்கள் பெரும்பாலும் கரீம் நகர், நிசமாபாத், ஐதராபாத் மக்கள்தான். மற்றவர்கள் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 296 times, 1 visits today)

Post Author: metronews 3