பிரதான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றில் முதல் தடவையாக சம்பியனாவதற்கு இங்கிலாந்து எடுத்துக்கொண்ட முயற்சியை முறியடித்த பாகிஸ்தான், சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் மூன்றாவது தடவையாக ஐ. சி. சி. சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் சாதிக்கத் தவறியமை குறிப்பிடத்தக்கது.
கார்டிவ் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் கிட்டத்தட்ட 13 ஓவர்கள் மீதமிருக்க இங்கிலாந்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது.
இந்த வெற்றிக்கு பாகிஸ்தான் வீரர்களது வீராப்பும் ஆற்றலும் முக்கிய காரணமாக அமைந்தன.
அதன் மூலம் இங்கிலாந்தை 211 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய பாகிஸ்தான், அவ்விலக்கை 38ஆவது ஓவரில் கடந்தது.
குழு ஏயிற்கான லீக் சுற்றில் பங்களாதேஷ், நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளையும் இலகுவாக வெற்றிகொண்டு இந்த சுற்றுப் போட்டியில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்துக்கு சொந்த மண் அனுகூலம் எந்தவகையிலும் கைகொடுக்கவில்லை.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து பலமான நிலையில் இருந்தபோது பந்துவீச அழைக்கப்பட்ட இடைநிலை வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி மூன்று முக்கிய விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தின் தன்மையை பாகிஸ்தானுக்கு சாதகமாகத் திருப்பினார்.
அவருக்கு பக்கபலமாக ஜுனைத் கான், அறிமுக வீரர் ரும்மான் ரயீஸ் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினர். உபாதைக்குள்ளான மொஹமத் ஆமிருக்குப் பதிலாக கடைசி நேரத்தில் அணியில் ரயீஸ் இணைத்துக்கொள்ளப்பட்டார்.
ஒரு கட்டத்தில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்த இங்கிலாந்து மேலதிக 88 ஓட்டங்களுக்கு எஞ்சிய 8 விக்கெட்களை இழந்தது.
பதிலுக்கு பாகிஸ்தான் சுமுகமாகத் துடுப்பெடுத்தாடி வெற்றியை சுலபமாக ஈட்டியது. அஸ்ஹர் அலி, பக்கார் ஸமான் ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்ததுடன் அவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 118 ஓட்டஙகள் அதன் வெற்றியை சுலபப் படுத்தியது.
எண்ணிக்கை சுருக்கம்
இங்கிலாந்து 49.5 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 211 (ஜோ ரூட் 46, ஜொனி பெயார்ஸ்டோ 43, பென் ஸ்டோக்ஸ் 34, ஒய்ன் மோர்கன் 33, ஹசன் அலி 35 – 3 விக்., ஜுனைத் கான் 42 – 2 விக்., ரும்மான் ரயீஸ் 44 – 2 விக்.)
பாகிஸ்தான் 37.1 ஓவர்களில் 215 – 2 விக். (அஸ்ஹர் அலி 76, பக்கார் ஸமான் 57, பாபர் அஸாம் 38, மொஹமத் ஹபீஸ் 31 ஆ.இ.)