ஒரே துறையில் புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் நண்பர்களாக விளங்குவது எப்போதும் மகிழ்ச்சிக்குரியது. தொழிற்சார் ரீதியில் இவர்கள் இணைந்தும் செயற்படுவது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.
இந்த வகையில், அமெரிக்காவின் பிரபல பாடகிகளான டெய்லர் ஸ்விப்ட்டும் செலீனா கோமஸும் நெருங்கிய நண்பிகளாகவும் விளங்குகின்றனர்.
இந்நிலையில், பாடகி செலீனா கோமஸ் தனது புதிய பாடல் வீடியோவொன்றில் டெய்லர் ஸ்விப்ட்டையும் தோன்றச் செய்துள்ளார்.
“பேட் லையர்” எனும் இந்த பாடல் வீடியோ கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இவ்வீடியோவில் டெய்லர் ஸ்விப்ட் நேரடியாகத் தோன்றவில்லை.
ஆனால், இப்பாடல் காட்சியில் இடம்பெறும் படுக்கை அறையொன்றில் காணப்படும் போஸ்டரில் டெய்லர் ஸ்விப்ட்டும் தோன்றுகிறார்.
சிறியதொரு கணத்திலேயே டெய்லர் ஸ்விப்ட்டின் படம் செலீனாவின் பாடலில் இடம்பெறுகின்றபோதிலும் இவ்விரு பாடகிகளுக்கு இடையிலான நீண்ட கால நட்பை உறுதிப்படுத்துவதாக இது அமைந்துள்ளது என விமர்சிக்கப்படுகிறது.
“நான் எதிர்கொண்ட ஒவ்வொரு பிரச்சினையையும் டெய்லர் ஸ்விப்ட் தீர்த்து வைக்க முடியும்” என செலீனா கோமஸ் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.