(எம்.எப்.எம்.பஸீர்)
பாணந்துறை நகரிலும் எலுவில பகுதியிலும் இரு பள்ளிவாசல்கள் மற்றும் இரு கடைகள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய கும்பலை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வின் கீழ் செயற்பட்ட சிறப்புப் பொலிஸ் குழுவே இவர்களைக் கைது செய்துள்ளது.
பின்னர் இவர்கள் பாணந்துறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் மா அதிபரின் அலுவலக பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.
கைதான நால்வரில் பொதுபலசேனா அமைப்புடன் இணைந்து செயற்பட்ட பெளத்த தேரர் ஒருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி சுட்டிக்காட்டினார்.
நேற்றைய தினம் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்சாவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடியும் இணைந்து ஊடகவியலாளர்களிடம் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வைத்து இது குறித்த தகவல்களை தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸ் பேச்சாளர் கூறியதாவது, இனங்கள், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
அதன்படி பதிவான வெறுப்பூட்டும் அத்தகைய சம்பவங்கள் தொடர்பில் தனித்தனியான பொலிஸ் குழுக்களைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்தோம். இந்நிலையில் தற்போது அந்த விசாரணைகளின் பலன் தெரிய ஆரம்பித்துள்ளது.
நுகேகொட பகுதியில் முஸ்லிம் கடைகளுக்கு தீ வைத்தவரை நுகேகொட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்பட்ட குழு கைது செய்ததைப் போன்று பாணந்துறை பகுதியில் பதிவான சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சொய்சாவின் கீழ் செயற்பட்ட சிறப்பு பொலிஸ் குழுவினர்களே ஆவார்.
மே மாதம் 17 ஆம் திகதி பாணந்துறை பகுதியில் எலுவில முஸ்லிம் பள்ளிவாசல் மீதும் அதற்கு முன்னைய தினம் பாணந்துறை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீதும் பெற்றோல் குண்டுத் தக்குதல் நடத்தியமை, எலுவில பகுதியில் இரு முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பிலேயே நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு தேரரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் இரு சிவிலியன்களும் உள்ளடங்குகின்றனர். அவர்கள் இந்த குற்றங்களை புரிவதற்காக பயன்படுத்திய கெப் வாகனம், இரு வாள்கள், ஒரு ஹொக்கி தடி மற்றும் பெற்றோல் குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதன் போதே அவர்களை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதனை விட கடந்த மே 20 ஆம் திகதி குருணாகல் மல்லவபிட்டி பகுதியில் ஜும் ஆ பள்ளி வாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பிரதான சந்தேக நபருக்கு சொந்தமான கடை அறையிலிருந்து இனவாத போஸ்டர்கள் பல மீட்கப்பட்டன.
சந்தேக நபர்களில் பலர் பொதுபலசேனாவின் செயற்பாட்டு உறுப்பினர்களாவர். உண்மையில் பாணந்துறை சம்பவத்தில் கைதான பெளத்த தேரர் பொதுபலசேனாவின் செயற்பாடுகளுடன் மிக நெருக்கமாக செயற்பட்டவர்.