மைலோ ஜனாதிபதி கிண்ண றக்பி இறுதியில் முதல் தடவையாக புனித ஜோசப் கல்லூரி

(நெவில் அன்தனி)


பாடசாலைகள் றக்பி லீக் போட்டிகளில் மாறுபட்ட பெறுபேறுகளுடன் மைலோ ஜனாதிபதி கிண்ண நொக் அவுட்போட்டியில் விளையாட தகுதிபெற்ற புனித ஜோசப் கல்லூரி இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்று வரலாறு படைத்துள்ளது.

sjc-dharmaraja-semi-final

கண்டி தர்மராஜ அணிக்கு எதிராக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் புத்திசாதுரியத்துடன் விளையாடிய புனித ஜோசப் அணி 34 – 12 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று மைலோ ஜனாதிபதி கிண்ண இறுதிப் போட்டியில் முதல் தடவையாக விளையாட தகுதிபெற்றது.


போட்டியின் முதலாவது பகுதியில் தர்மராஜ அணி வீரர்கள் இழைத்த தவறுகள் காரணமாக புனித ஜோசப் அணிக்கு மத்தியஸ்தரால் அடுத்தடுத்து பெனல்டிகள் வழங்கப்பட்டன. 


ஆறாவது நிமிடத்தில் கிடைத்த 35 மீற்றர் தூர பெனல்டியை மிக இலாவகமாக இலக்கு தவறாமல் உதைத்த சச்சித் சில்வா 10 ஆவது நிமிடத்தில் 30 மீற்றர் துஸர பெனல்டியையும் 18 ஆவது நிமிடத்தில் 18 மீற்றர் தூர பெனல்டியையும் போட  புனித ஜோசப் அணி 9 – 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது.


milo-new-2x5தொடர்ந்து 23ஆவது நிமிடத்தில் சச்சித் சில்வா மிகுந்த துணிச்சலுடன் செயற்பட்டு ட்ரை ஒன்றை வைத்து அதற்கான மேலதிகப் புள்ளிகளையும் பெற்றுக்கொடுக்க புனித ஜோசப் அணி 16 – 0 என முன்னிலை வகித்தது. 
தர்மராஜ அணி 29 ஆவது நிமிடத்தில் சி.கே.பி. ஏக்கநாயக்க மூலம் ட்ரை ஒன்றை வைத்தது. அதற்கான மேலதிகப் புள்ளிகள் பெறப்படவில்லை.


இடைவேளையின்போது புனித ஜோசப் 16 – 5 என முன்னிலையில் இருந்தது. இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்தபோது 43 ஆவது நிமிடத்தில் தர்மராஜ அணி சார்பாக பி. டி. உதங்கமுவ ட்ரை ஒன்றை வைத்தார். அதற்கான மேலதிகப் புள்ளிகளை தேஷப்ரிய பெற்றுக்கொடுத்தார்.


ஆனால் அதன் பின்னர் தர்மராஜ வீரர்கள் தொடர்ச்சியாக தவறுகள் இழைக்க புனித ஜோசப் அணியின் ஆதிக்கம் வலுக்கத் தொடங்கியது.


சச்சித் சில்வா 47 ஆவது, 60 ஆவது நிமிடங்களில் மேலும் இரண்டு பெனல்டிகளைப் போட புனித ஜோசப் 22 – 12 என முன்னிலை அடைந்தது.


போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் அணியினர் சத்துர செனவிரட்ன மூலம் ட்ரை ஒன்றை வைத்தனர். அதற்கான மேலதிகப் புள்ளிகளையும் சச்சித் சில்வா பெற்றுக்கொடுத்தார்.


மூன்று நிமிடங்களின் பின்னர் புனித ஜோசப் அணித் தலைவர் வினுல் பெர்னாண்டோ ட்ரை ஒன்றை வைத்தார். ஆனால் அதற்கான மேலதிகப் புள்ளிகள் பெறப்படவில்லை.

(Visited 36 times, 1 visits today)

Post Author: metro