திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை படைத்த நடிகர் தனுஷ்…!

0 1,324

தனுஷ், பிரபல கிராமக்கதைகளின் இயக்குனர் கஸ்தூரிராஜா மற்றும் ராஜேஸ்வரி தம்பதிக்கு ஜூலை மாதம் 28 ஆம் திகதி, 1984 ஆம் ஆண்டில் பிறந்தார். இயக்குனர் செல்வா ராகவனின் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் எனப் பல சிறப்பம்சங்களை உடைய அவர், தனது சகோதரர் செல்வராகவன் மூலமாகத் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ரஜனிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்ட இவர். யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இவர் தனது பள்ளிப்படிப்பை சென்னையில் உள்ள ஆழ்வார்த் திருநகரில் இருக்கும் செயின்ட் ஜோன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். தனது 12ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த அவரை, அவரது சகோதரரும், இயக்குனருமான செல்வராகவன் அவர்கள், திரையுலகில் நுழையுமாறு வற்புறுத்தியதால், அவர் தனது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பினார்.

தனது அண்ணனின் விருப்பத்தை ஏற்ற அவர், 2002 ஆம் ஆண்டில் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலமாக இருவரும் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தனர். அவரது தந்தையான கஸ்தூரிராஜா அவர்கள் இயக்கிய அப்படத்தின் திரைக்கதையை செல்வராகவன் எழுதி, தனுஷ் கதாநாயகனாக நடித்தார். அவர்கள் மூவரின் கூட்டணியில் வெளியான அப்படம், அமோக வெற்றிப் பெற்றதால், அடுத்த ஆண்டே அவர்கள் இருவரும் மீண்டும் ‘காதல் கொண்டேன்’ என்ற படத்தில் கைகோர்த்தனர். இப்படத்தை செல்வராகவன் அவர்கள் எழுதி இயக்கினார். இப்படம் அபார வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுக்காகப் பரிந்துரையும் செய்யப்பட்டது.

  

‘காதல் கொண்டேன்’ படம் மூலமாக சிறந்த நடிகரென்ற பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் அவரது அற்புத நடிப்பைக் கண்ட இயக்குனர் வாசு அவர்கள், அவரது அடுத்தப் படமான ‘திருடா திருடி’ திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்தார். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அவர் தொடர்ந்து, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ , ‘சுள்ளான்’, ‘ட்ரீம்ஸ்’, ‘தேவதையைக் கண்டேன்’, ‘அது ஒரு கனாக்காலம்’, ‘புதுப்பேட்டை’, ‘திருவிளையாடல் ஆரம்பம்’ என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தார்.

தனது இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இவர், ‘மயக்கம் என்ன’, ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘மரியான்’ போன்ற படங்களில் பாடலாசிரியராகவும், ‘3’, ‘எதிர் நீச்சல்’, போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். 2011 ஆம் ஆண்டில் அவர் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் சிறந்த நடிகருக்காக ‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’ மற்றும் ‘ஃபிலிம்ஃபேர் விருது’ வென்ற அவர், 2012ல் நடித்து வெளியான ‘3’ படத்தின் சிறந்த நடிகருக்கான ‘விஜய் விருதையும்’ வென்றுள்ளார். ‘3’ படத்தில் அவர் எழுதிப் பாடிய பாடலான ‘வய் திஸ் கொலவெறி ’ என்ற பாடல், யூட்யூப் இணையத்தளத்தில் வெளியாகி, சில மணி நேரங்களிலேயே அதிகளவில் பார்வையிடப்பட்டதால், ஓரிரு நாட்களிலேயே தேசிய அளவில் புகழ்பெற்றார்.

குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் தனுஷ் 2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ரோய் அவர்கள் இயக்கிய பொலிவுட் திரைப்படமான ‘ரஞ்சனா’ என்ற படத்தில் நடிகை சோனம் கபூருடன் இணைந்து நடித்தார். வெளியான ஒரே வாரத்திலேயே 34 கோடி வசூல் சாதனைப் படைத்து, அமோக வெற்றிபெற்ற அப்படத்தை, ‘பொக்ஸ் ஆஃபிஸ் ஹிட்’ என்று அறிவித்தது. மேலும், அவரை ஹிந்தித் திரையுலகிலும் ஒரு அற்புத நடிகரென்ற முத்திரையைப் பதிக்கச் செய்தது.

 

வுண்டர்பார் நிறுவனம் எப்படித் தொடங்கியது என்றால், செல்வா (செல்வராகவன்) அவருடைய அண்ணன் வாய்ப்புக்காக நிறைய நடிகர்களிடம் கதை சொல்லி, நிறைய தயாரிப்பு நிறுவனங்களின் படிகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது ஒருநாள் தனுஷிடம் வருத்தப்பட்டு, ‘ஒருவேளை நாளைக்கு நாம் சினிமாவில் ஜெயித்துவிட்டோம் என்றால், நல்ல திறமைகளுக்கு வழியமைத்துக் கொடுக்க கண்டிப்பாக நாம் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும்’ என்று சொன்னார். அதற்காகத் தொடங்கப்பட்டது வுண்டர்பார் ஃபிலிம்ஸ். நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அவர், ‘3’ மற்றும் ‘எதிர் நீச்சல்’ போன்ற படங்களைத் தயாரித்து, ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்றும் தன்னை நிரூபித்துள்ளார்.

இந்திய திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துக்கொண்ட தனுஷ் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை தொடர்ந்து அவருக்கு ஹொலிவுட் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. கனடா நாட்டைச் சேர்ந்த இயக்குனர் கென் ஸ்கொட் இயக்கத்தில் “தி எக்ஸ்ட்ராஓர்டினரி ஜர்னி ஒப் பகிர் ”என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பெல்ஜியம் நாட்டில் நடைபெற்று வருகிறது. பிரபல ப்ரெஞ்ச் நாவலான ‘The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ திரைப்படமாக உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

இன்று ஜூலை 28 நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை தனுஷ் ரசிகர்கள் விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். மேலும், பல்வேறு திரையுலகினரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெ ரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!