உலக புகழ்பெற்ற “பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்சன்”

0 1,585

ஆபிரிக்க நாட்டின் கருப்பினத்தை சேர்ந்த அமெரிக்க பொப் இசைப் பாடகர், நடன இயக்குனர், பாடல் ஆசிரியர், தொழில் தலைவர், மற்றும் வள்ளல் எனப் பன் முகங்கள் கொண்ட புகழ்பெற்றவர் மைக்கல் ஜாக்சன். இவர் 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் – கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தார். 

இசைக் குடும்பமான மைக்கலின் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் இயக்குபவராக இருந்தார். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் உடன்பிறந்தவர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியாத நிலை ஏற்பட்டதில் தன் மகன்களுக்குக் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். மைக்கல் ஜாக்சனுக்கு ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் முதல் பரிசு பெற்றது. பின் இசையில் நாட்டம் அதிகமாக இருக்க தன் தமயன்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார்.

உலகின் புகழ்பெற்ற இசையரங்குகளில் ஒன்றான அப்பல்லோ அரங்கில் ‘ஜாக்சன் 5’ குழுவின் முதல் பாட்டுத் தொகுப்பை அந்நாளில் மிகவும் புகழ்பெற்ற டயானா ராஸ் எனும் பாடகி வெளியிட்டார். அதன் பிறகு தொடர்ந்து டயானா ராஸ் மைக்கேலுடன் இணைந்து பாட ஆரம்பித்தார். அதன் பின் மைக்கலும் உலகப் புகழ்பெற்ற பாடகராக மாறினார். ஒன்பது வயதிலேயே மைக்கல் விண்மீன் நிலையை பெற்றார்.

பின் 1971 இல் தனியாக பாட ஆரம்பித்து புகழடைந்த நேரத்தில் கிங் அஃப் பாப் (பாப் இசையின் மன்னர்) என்றும் எம்.ஜெ என்றும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

இவரால் வெளியிடப்பட்ட இசைத்தொகுப்புகளில் “ஐந்து” உலகெங்கும் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டதாகும். 1982இல் வெளிவந்த “திரில்லர்” உலகில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்ட இசைத் தொகுப்புகளின் பட்டியலில் முதலாம் நிலையில் உள்ளது. உலகெங்கிலும் உள்ள பல தரப்பு மக்களின் நடுவில் நாற்பது ஆண்டு காலமாகப் புகழ்பெற்றவராக வாழ்ந்து வந்துள்ளார்.

பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பொப்’ என்றழைக்கப்படும் இவர் புதிய நடனமொன்றையும் படைத்தார். அமெரிக்காவில் முதலாகப் பல மக்கள் செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞரானார். இவரின் இசை நிகழ்படங்களை எம்.டி.வி. ஒளிபரப்பு செய்து எம்.டி.வி.யும் புகழடைந்தது.

இவருடைய திருமண வாழ்க்கையானது 1996இல் பிரஸ்லி என்ற பெண்ணை மணந்தார். பின்னர் இரு வருடங்கள் கழித்து டெபோரே என்ற பெண்ணையும் மணந்தார். இரண்டு திருமணங்களுமே மைக்கல் ஜாக்சனின் அன்னியமான நடவடிக்கைகளால் விவாகரத்தில் முடிந்தன. மைக்கேல் ஜாக்சனுக்கு பாரிஸ் மைக்கல் காதரின் ஜாக்சன் என்ற மகளும், மைக்கல் ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் மைக்கல் ஜாக்சன் என்று இரு மகன்களும் உள்ளனர்.

பல சமூக தொண்டுகளுக்கு உலக முழுவதிலும் இசையரங்கு நிகழ்ச்சிகளை நடத்தி நிதியுதவி செய்துள்ளார். ஆனாலும் குழந்தைகளுடன் உடலுறவு செய்தார் என்று இவர் குற்றம் சாட்டப்பட்டார். இறுதியில் இவர் குற்றமில்லாதவர் என்று தெரிவித்த போதிலும் இவர் மீதான பொது மக்களின் கருத்துகள் மோசமானதாகவே இருந்து வந்தது. ஆனாலும் இவருடைய பாடல்கள் மீதான செல்வாக்கு குறையவேயில்லை.

1979இல் ஒரு நடனப் பயிற்சியின்போது மைக்கல் ஜாக்சனின் மூக்கு உடைந்தது. அதனால் முதன் முதலில் ஓர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்து கொண்டார். அதனால் சுவாசிப்பதில் தொந்தரவு ஏற்படவே மீண்டும் ஓர் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்ய வேண்டி வந்தது. 3000 பார்வையாளர்களுக்கு முன் பில்லி ஜீன் பாடலைப் பாடி ஆடிக் கொண்டிருக்கும்போது, மேடையில் வெடித்த வெடியின் தீ மைக்கேல் ஜாக்சனின் முடியில் பட்டது.

“திரில்லர்” என்ற பாடல் தொகுப்பு ரசிகர்கள் நடுவில் பெருத்த வரவேற்பை ‌பெற்றது. ஒட்டு மொத்த உலகத்தையும் ஜாக்சனை திரும்பிப் பார்க்க வைத்தது. பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வாங்கினார். கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் வாங்கியுள்ளார். 75 கோடி தொகுப்புகள் விற்றதற்காகவும், 13 கிராமி விருதுகள் பெற்றும், இரண்டு முறை கின்னஸ் நூலில் இடம் பெற்றார் மைக்கல் ஜாக்சன்.‘ப்ளாக் ஆர் ஒய்ட்’ என்ற காணொளி ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. 50 கோடி பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள். இன்றுவரை இதுவே உலக அளவில் அதிகப் பார்வையாளர்கள் பார்த்த நிகழ்ச்சியாகவும், இவருக்கு நிகர் இவர் மட்டுமே என்பது இது வரைக்காலமும் யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட இசை கலைஞன் 2009, ஜூன் 25 அன்று இவர் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தனது வீட்டில் மாரடைப்பு காரணமாக இறந்தார். இதனை லோஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்பு துறை கேப்டன் இச்டீவ் ருடா உறுதிப்படுத்தினார். தனக்கான ஒரு தனி நடன பாணியை உருவாக்கிக் கொண்டு உலகெங்கிலும் தனக்கான தனி அடையாளத்தையும், ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவரின் மரணம் குறித்த மர்மங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இவரின் இறப்பிற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆகஸ்ட் 29 ஆம் நாளான இன்று மைக்கலின் பிறந்த நாளாகும். இன்று பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தையாவது எதிர்காலத்தில் பொப் இசைப்படாகர் மைக்கல் ஜாக்சனை போல்  உருவெடுக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!