ஆப்கானிடம் மண்டியிட்டு தொடரிலிருந்து வெளியேறியது இலங்கை…!

0 277

ஆசியாவின் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் 14ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் டுபாயில் செப்டம்பர் 15ஆம் நாள் ஆரம்பமாகி செப்டம்பர் 28ஆம் திகதிவரை நடைபெறுகிறது. 

இந்நிலையில் ஆசியக் கிண்ணத் தொடரின் மூன்றாவது போட்டி நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி களமிறங்கியது. போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கிணங்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் சார்பில் ரஹ்மத் ஷா 72 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணியின் திஸர பெரேரா 55 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து 250 ஒட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் மென்டீஸ் ஓட்டங்கள்  ஏதும் எடுக்காமல் முஜிபுர் ரஹ்மானுடைய பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவீரர்களும் வெளியேறினர்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 16 ஓவர்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு துடுப்பெடுத்தாடி வந்தது. ஒரு பக்கத்தில் உபுல் தரங்கவும் மறு பக்கத்தில் அதிரடி ஆட்டக்காரரான குசல் பெரேராவும் ஆடிவர அணியின் ஓட்ட எண்ணிக்கை சுமூகமான நிலைக்கு திரும்பியது.

இருப்பினும் 20 ஆவது ஓவரை வீச ஆப்கானின் சுழல் புயல் ரஷித் கான் பந்தை கையில் எடுக்க அவரின் ஐந்தாவது பந்திலேயே குசல் பெரேரா 17 ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

முக்கிய வீரர்கள் இரண்டு இலக்க ஓட்டங்களில் வெளியேற ஆட்டத்தின் 41.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 91 ஓட்டத்தினால் ஆப்கானிடம் சரணடைந்தது.. இதனையடுத்து இலங்கை அணி 91 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது..

 

அத்துடன் 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் முதல் அணி என்ற பெயரையும் பதித்துள்ளது.

இன்று துபாயில் நடைபெறவுள்ள 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் மோதவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!