அம்பலாந்தோட்டை தாக்குதலில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்

0 110

                                                                                                                                       (எம். எஸ். முஸப்பிர்)
அம்பலாந்தோட்டை, உஹபிட்டிகொட பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற தாக்குதலில் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாந்தோட்டை மாமடல பெமிணியன்வில பிரதேசத்தைச் சேர்ந்த எஸ். எம். கசுன் எரந்திக என்ற இளைஞரே இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சிங்கள தமிழ் புதுவருட தினத்தன்று இரவு மேலும் நால்வரோடு தனது மனைவியின் வீட்டுக்குச் சென்று மனைவியின் சகோதரரர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு அவர்களது வீட்டுக்கும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து குறித்த நபர் திரும்பிக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஹூங்கம பொலிஸார் நால்வரைக் கைது செய்துள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(M01)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo