வலிதெற்கில் ஒரு மரத்தை வெட்டினால் 3 மரங்களை நடவேண்டும்!- தவிசாளர் உத்தரவு

0 117

வலிதெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் மரம் ஒன்றினை தறித்தால் மூன்று மரங்களை நாட்ட வேண்டும் என வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பாக வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன் தெரிவிக்கையில் எமது பிரதேச சபை எல்லைக்குள் கட்டிட அனுமதி கோரி வருவோரில் பலர் கட்டிடங்களை கட்டுவதற்காக தமது காணிகளில் உள்ள மரங்களை தறித்து அழிக்கின்றனர். இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இயற்கைச் சமநிலையை பாதுகாக்கவும் கட்டிட அனுமதிக்கான விண்ணப்பதாரர்கள் கட்டிட நிரமாணிப்புக்காக தமது காணியில் உள்ள ஒரு மரத்தைத் தறித்தால் அந்தக் காணியில் மூன்று மரக்கன்றுகளை நாட்டினால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்கப்படும் என கடந்த சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தீர்மானம் கட்டிட அனுமதியின்போது கடுமையாக அமுல்படுத்தப்படும். மேலும் மரங்கள் வளர்பதற்கான இடவசதி இல்லாமல் கட்டிடம் கட்ட முனைவோருக்கு அதற்கான அனுமதி வழங்கப்படமாட்டது.

அதுமட்டுமின்றி கட்டிட அனுமதிக்காக மரக்கன்றுகளை நட்டுவிட்டு பின் அவற்றை அகற்றினால் கட்டிடம் கட்டிய பின்னால் வழங்கப்படுகின்ற அமைவுச்சான்றிதழ் வழங்கப்படமாட்டாது என்பதுடன் கட்டிட அனுமதிக்கு முரணாக நடந்து கொண்டதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பிரதேச சபையில் எடுக்கப்படும் தீர்மானம் சட்டவலுவுள்ளது என்பதால் கட்டிட எமது பிரதேச சபை எல்லைக்குள்ளான கட்டிட அனுமதிக்கான நடைமுறையின் போது இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கட்டிட அனுமதியில் தொடர்புபட்ட திணைக்களங்களான நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சுற்றுச்சூழல் அதிகார சபை ஆகியவற்றுக்கும் இத்தீர்மான வரைபு அனுப்பப்படும் என தவிசாளர் க.தர்சன் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo