பாக். 5 நட்சத்திர ஹோட்டல் மீதான தாக்குதலில் 4 தீவிரவாதிகள், 3 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பலி!

0 178

பாகிஸ்தானில் ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பாதுகாப்புப் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டதுடன், பாதுகாப்புத் தரப்பினரின் பதில் தாக்குதலில் தாக்குதலை நடத்திய நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

பலோசிஸ்தான் மாகாணத்திலுள்ள துறைமுக நகரான குவாடரில் அமைந்துள்ள பேர்ல் கொன்டினென்டல் ஹோட்டலின் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற இத் தாக்குதலில் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். 

பாதுகாப்புப் படையினரின் சீருடைகளை அணிந்து நவீன ஆயுதங்களை ஏந்திய தீவிரவாதிகள், ஹோட்டல் ஊழியர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு தாக்குதலை மேற்கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புனித ரமழான் காலம் ஆகையால் மேற்படி ஹோட்டலில் விருந்தினர்கள் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தின் பின் மேற்படி ஹோட்டல் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.குவாடர் நகரில் துறைமுக அபிவிருத்தி உட்பட பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் சீன முதலீடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலுக்கு பலோசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) எனும் கிளர்ச்சி அமைப்பு உரிமை கோரியுள்ளது.

பலோசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள், சீன முதலீடுகளை எதிர்த்து வருகின்றனர். இம் முதலீடுகளால் உள்ளூர் மக்களுக்கு நன்மை எதுவுமில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo