வடமேல் மாகாணத்தில் நடந்தது என்ன? (முழு விபரம் படங்களுடன்)

0 749

                                                                                          (எம்.எப்.எம்.பஸீர்)
வட மேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல் மாவட்டம், குளியாப்பிட்டி மற்றும் நிக்கவரட்டி பகுதிகளில் உள்ள சில கிராமங்களை இலக்குவைத்து திட்டமிட்ட குழு ஒன்றினால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த இரு பிரதான நகரங்களையும் மையப்படுத்தி சுமார் 30 கிராமங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. 5 ஜும்ஆ பள்ளிவாசல்கள் உட்பட 9 பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் (12) குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவில் ஹெட்டி பொல வீதியில் நான்கு கடைகள் மீது திட்டமிட்ட குழு ஒன்று நடத்திய தாக்குதல்களுடன் குளியாப்பிட்டிய பகுதியில் தாக்குதல்கள் ஆரம்பமாகின. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் நிலைமை மோசமடைந்ததையடுத்து பின்னர் நிக்கவரட்டி பொலிஸ் வலயத்தில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி கொபேய்கனே மற்றும் ரஸ்னாயக்கபுர பகுதிகளுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவற்றையும் மீறி வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் மற்றும் சில உளவுத் தகவல்களை மையப்படுத்தியும் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய முழு வட மேல் மாகாணத்துக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் குளியாப்பிட்டிய பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் குளியாபிட்டியவில் பொலிஸ் ஊரடங்கு அமுலிலிருந்த போது, பிங்கிரிய பொலிஸ் பிரிவில் பாரிய வன்முறைகள் பதிவாகின.
பிங்கிரிய சம்பவம்:

பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினியம பகுதியில் நேற்று முன்தினம் மூன்று பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டன.. மஸ்ஜிதுத் தக்வா ஜும் ஆ பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் அப்ரார், மஸ்ஜிதுல் ஆயிஷா ஆகிய பள்ளிவாசல்களே சேதப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களின் கண்ணாடிகள் மின் விசிறிகள், தளபாடங்கள் சேதமாகப்பட்டன.
நேற்றுமுன்தினம் ஊரடங்குச் சட்டம் அமுலிலிருந்த போதே பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்ட கினியம கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றார்கள். கினியம குளத்திலிருந்து துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியே இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

8 மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. அப்ரார் தக்கியா பள்ளிவாசலுக்குள் நுழைந்த குழுவினர் சிறுநீர் கழித்து பள்ளி வாசலை அசுத்தப்படுத்தி சேதமாக்கியுள்ளனர்.

கினியம ஆயிஷா தக்கியா பள்ளிவாசலுக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த குர்ஆன் பிரதிகளைத் தீயிட்டு எரித்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பங்குகொண்டதாகவும் அதிகமானோர் வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் கினியம மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து கினியம பகுதியில் பள்ளிவாசல்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் 6 பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

பூவெல்ல பள்ளிவாசல் மீதும் தாக்குதல்

இதனிடையே பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவெல்ல கிராமத்தில் உள்ள தக்கியா பள்ளிவாசல் ஒன்றின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதேவேளை கரந்திப்பொலயில் தாக்கியா ஒன்றும் தாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்று பண்டுவஸ்நுவர, ஹெட்டிபொல நகர் பள்ளிவாசலும், கொட்டம்பிட்டிய பள்ளிவாசல்களும் தாக்கப்பட்டுள்ளன. ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இந்த இடங்களில் பெரும் பதற்ற சூழல் நிலவிய நிலையிலேயே திட்டமிட்ட வன்முறையாளர்களால் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது மடிக்கே அவுக்கன, நிக்கபிட்டி, ஹெட்டிப்பொல மற்றும் கொட்டாம்பிட்டி பகுதிகளின் பள்ளிவாசல்களுக்கு மேலதிகமாக வீடுகள் , வர்த்தக நிலையங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. குளியாப்பிட்டிய யாயவத்த கிராமத்தில் 5 வீடுகள் மற்றும் கடை ஒன்றும் தாக்குதல்களுக்கு உள்ளானது.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!