இலங்கையின் விவாக சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யமுயற்சி; தந்தை, மகள் உட்பட 4 பங்களாதேஷ் பிரஜைகள் நாடு கடத்தல்!

0 109

(ரெ.கிறிஷ்ணகாந்)

இலங்கையின் விவாக சட்டத்தை பயன்படுத்த, பிரான்ஸ் பிரஜாவுரிமையை பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த தந்தை மகள் உட்பட நால்வர் நேற்றுமுன்தினம் மாலை இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் பிற்பகல் 2 மணியளவில் ஓமான் விமான சேவைக்கு சொந்தமான டபிள்யூ.வை 372 என்ற விமானத்தில் தற்காலிக கடவுச்சீட்டின் மூலம், பிரான்ஸ் நாட்டில் அகதி அந்தஸ்தை பெற்றுள்ள 35 வயதான பங்களாதேஷ் நாட்டு இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதன்போது, விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அவர்களிடம் இலங்கை வந்தமைக்கான நோக்கத்தை வினவியபோது, அதற்கு உரிய பதிலளிக்க தவறியமையால் அவர்கள் இலங்கை வந்த விமானத்திலேயே மீண்டும் அவர்களை பிரான்ஸுக்கு நாடுகடத்த அந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

அதற்கமைய, மேற்படி ஓமான் விமான சேவையின் விமானத்தில் அவர்களை ஏற்ற முற்பட்டபோது, அவ்விருவரும் விமான பணிக்குழுவினருக்கு இடையூறு விளைவித்ததுடன் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால், அவர்களை விமானத்தில் ஏற்றுவதை தவிர்த்த விமான பணிக்குழுவினர், அவ்விருவரையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன்பின்னர், பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து புறப்பட்டு மாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த யூ.எல். 190 என்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பங்களாதேஷ் நாட்டவர்களான 50 வயதான நபரும் அவரது மகளான 20 வயதான யுவதியும் வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் விமான நிலையத்தினுள் வந்தததன் பின்னர், ஏற்கனவே நாடுகடத்த தயாராக இருந்த பங்களாதேஷ் பிரஜைகள் இருவரிடம் உரையாடியுள்ளனர். இதனை அவதானித்த குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள், அந்த நால்வரையும் தமது காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அதன்போது, குறித்த தந்தை மற்றும் மகளின் பயணப்பைகளை சோதனையிட்டபோது, மற்றைய இரு பங்களாதேஷ் நாட்டவர்களின் கடவுச்சீட்டு பிரதிகள் அவற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டன.

இதனையடுத்து, இவர்களிடம் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தீவிரவிசாரணைகளின் மூலம் இவர்களது திட்டம் வெளிப்பட்டுள்ளது.இலங்கையிலுள்ள விவாக சட்டத்துக்கமைய, மூன்று நாட்கள் இலங்கையில் கழித்ததன் பின்னர், இலங்கையில் தமது விவாகத்தை பதிவு செய்ய முடியும் என்பதால், அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, இலங்கையினுள் விவாகப் பதிவு செய்ததன் பின்னர், கணவரான நபர் பிரான்ஸ் சென்று தனது மனைவிக்காகவும் குடியுரிமை கோருவதே அவர்களது திட்டம் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணைகளின் பின்னர், பிரான்ஸிலிருந்து வந்த பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவரும் ஓமான் விமான சேவைக்கு சொந்தமான டபிள்யூ.வை 373 என்ற விமானத்திலும், பங்களாதேஷ் பிரஜைகளான தந்தையும் மகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 191 விமானத்தின் மூலமாகவும், நேற்றுமுன்தினம் மாலை 5.30 மணியளவில் தத்தமது நாடுகளை நோக்கி நாடு கடத்தப்பட்டதாக விமான நிலைய குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் பலசந்தர்ப்பங்களில் இதுபோன்ற சம்பவங்களை விசாரணைகளின் மூலம் வெளிக்கொண்டுவந்ததாக குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (சிங்களத்தில் டீ.கே.ஜி.கபில)

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo