ரோஹித் ஷர்மா, தோனி புதிய சாதனைகள்

0 113

இண்டியன் ப்றீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் 12ஆவது அத்தியாயத்துக்கான இறுதி ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை கடைசிப் பந்தில் ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட மும்பை இண்டியன்ஸ் அணி நான்காவது தடவையாக சம்பியன் பட்டத்தை சூடியது.

மும்பை இண்டியன்ஸ் சம்பியனான இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் ரோஹித் ஷர்மாவே அணித் தலைவராக இருந்துள்ளார். இதன்மூலம் இண்டியன் ப்றீமியர் லீக் கிண்ணத்தை நான்கு தடவைகள் வென்றெடுத்த முதலாவது அணித் தலைவர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.

இதனை விட அடம் கில்க்றிஸ்ட் தலைமையில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009இல் சம்பியனான அணியிலும் ரோஹித் ஷர்மா இடம்பெற்றார். இதன் பிரகாரம் 2009, 2013, 2015, 2017, 2019 ஆகிய வருடங்களில் சம்பியனான அணிகளில் ரோஹித் ஷர்மா இடம்பெற்றதுடன் ஐந்து தடவைகள் ஐ.பி.எல். சம்பியன் கிண்ணத்தை ஸ்பரிசித்த முதலாவது வீரராகவும் ரோஹித் ஷர்மா விளங்குகின்றார்.

ஐ.பி.எல். விக்கெட் காப்பில் தோனி சாதனை 
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பல்வேறு வெற்றிகளில் பெரும் பங்காற்றிவந்துள்ள அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனி, ஐ.பி.எல். போட்டிகளில் விக்கெட் காப்பாளருக்கான புதிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

இறுதிப் போட்டியில் மும்பை அணி வீரர்கள் குவின்டன் டி கொக், ரோஹித் ஷர்மா ஆகியோரின் பிடிகளை எடுத்ததன் மூலம் 132 ஆட்டமிழப்புகளில் பங்களிப்பு வழங்கி ஐ.பி.எல். போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புகளில் பங்காற்றியவர் என்ற சாதனைக்கு உரியவரானார். 

190 ஐ.பி.எல். போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள தோனி 132 ஆட்­ட­மி­ழப்­பு­களில் (94 பிடிகள், 38 ஸ்டம்ப்பிங்) பங்­காற்­றி­யுள்ளார்.
இதற்கு முன்பு கொல்­கத்தா அணித் தலை­வரும் விக்கெட் காப்­பா­ள­ரு­மான தினேஷ் கார்த்திக் 182 ஆட்­டங்­களில் 131 ஆட்­ட­மி­ழப்­பு­களில்  (101 பிடிகள், 30 ஸ்டம்ப்பிங்) பங்காற்றியிருந்தார்.

கிண்ணத்தை நாங்கள் ஒருவருக்கொருவர் நகர்த்திக்கொண்டே இருந்தோம்- ஐ.பி.எல். தோல்வியின் பின்னர் தோனி 

ஹைதராபாத்தில் ஞாயிறன்று கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் ஒரு ஓட்டத்தால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிபெற்றதை அடுத்து கருத்து வெளியிட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவர் மஹேந்த்ர சிங் தோனி, ‘‘கிண்ணத்தை நாங்கள் ஒருவருக்கொருவர் நகர்த்திக்கொண்டிருந்தோம்’’ என்றார்.

இரண்டு அணிகளும் மாறி மாறி வெற்றிபெறுவதற்கான வாய்ப்பை நெருங்கிய இப் போட்டி இரசிகர்களைவிட உரிமையாளர்களைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியதை அவதானிக்க முடிந்தது. வெற்றி இலக்கை நோக்கி சென்னை சுப்பர் கிங்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிபோது மிகச் சிறந்த நிலையில் இருந்தது. ஆனால், 12 ஓட்டங்கள் இடைவெளியில் சுப்பர் கிங்ஸ் மூன்று பிரதான விக்கெட்களை (ரெய்னா, ராயுடு, தோனி) இழந்ததை அடுத்து ஆட்டத்தின் பிடி மும்பை இண்டியன்ஸ் பக்கம் திரும்பியது.

‘‘ இந்தப் போட்டி வேடிக்கையான ஒன்றாக அமைந்தது. நாங்கள் கிண்ணத்தை அங்கும் இங்குமாக நகர்த்திக்கொண்டிருந்தோம். இரண்டு அணியினரும் தவறுகளை இழைத்தோம். இறுதியில் வெற்றிபெற்ற அணிதான் ஒரு தவறை குறைவாக செய்திருந்தது. 

‘‘அணி என்ற வகையில் நடப்பு பருவகாலம் சிறப்பாக இருந்தது. ஆனால் எமது ஆட்டத் திறன்களை மீட்டுப்பார்க்கவேண்டும். நாங்கள் முன்னரைப் போன்று திறமையை வெளிப்படுத்தவில்லை. எமது மத்திய வரிசையின் திறமை ஒருபோதும் பிரகாசிக்கவில்லை. ஆனால் சமாளித்துவிட்டோம். 

‘‘எமது பந்துவீச்சாளர்கள் திறமையாக செயற்பட்டனர். இந்த ஆடுகளம் 150 ஓட்டங்கள் பெறுவதற்கு உரித்தான ஆடுகளம் அல்ல. தேவைப்பட்ட நேரமெல்லாம் எமது பந்துவீச்சாளர்கள் விக்கெட்களை சரித்தனர். துடுப்பாட்டத்தில் எவரேனும் ஒருவர் பிரகாசித்தபோதெல்லாம் நாங்கள் வெற்றிபெற்ற வண்ணம் இருந்தோம். அடுத்த வருடம் வெற்றிபெறவதற்கான வழிமுறைகள் குறித்து கடுமையாக சிந்திக்கவேண்டும்’’ என்றார் தோனி.

 

 

     

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!
logo