வன்செயல்களின் பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விசேட குழு: ரவூப் ஹக்கீம்!

0 250

குருணாகல், கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் இனவாதிகளின் தாக்குதலுக்குள்ளான பிரதேசங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்காக சேத விபரங்கள் தொடர்பில் உரிய மதிப்பீடு செய்வதற்கு விசேட குழுவொன்றை அனுப்பி வைக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கொட்டாரமுல்லையில் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களினால் வடமேல் மாகாணத்தில் பாதிப்புக்குள்ளான இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் இன்னும் அச்சத்துடன் இருப்பதனாலும் பாதுகாப்பு நிலைமையை அவதானிப்பதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (15) இரண்டாவது நாளாகவும் பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு சென்றார்.

குருணாகல் மாவட்டத்தில் சேதமடைந்த முஸ்லிம் கிராமங்களை நேற்றுமுன்தினம் சென்று பார்வையிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், நேற்று புத்தளம் மாவட்டத்தில் நாத்தாண்டிய தொகுதியில் இனவாத வன்செயல்களினால் பெரும் பாதிப்புக்குள்ளான கொட்டராமுல்ல தும்மோதர மற்றும் புஜ்ஜம்பொல பிரதேசங்களை சென்று பார்வையிட்டார்.


இவற்றில் தும்மோதர கிராமம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அங்கு பெளசுல் அமீர் என்பவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுடன் இணைந்தாக தச்சுத் வேலைத்தளமும் அமைந்துள்ளது. அங்கு சென்ற அமைச்சர் தாக்குதலுக்குள்ளான அவரது வீட்டையும் எரியூட்டப்பட்ட வாகனத்தையும் பார்வையிட்டார்.
அத்துடன் தாக்குதலுக்குள்ளான தும்மோதர மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் உமர் தக்கியா மற்றும் புஜ்ஜம்பொல மொஹிதீன் பள்ளிவாசல் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டதுடன் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் மெளலவிமார்களுடனும் தாக்குதலின் பாரதூரம் குறித்து கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!