கண்டி தென்னக்கும்புரவில் பாலஸ்தீனிய பிரஜை கைது!

0 306

                                                                                                                             (செங்கடகல நிருபர்)
வீசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த பலஸ்தீனியர் ஒருவரைக் கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரை கண்டி மேலதிக நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கண்டி விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தென்னகும்புர பிரதேசத்தில் வீடு ஒன்றில் சோதனையிட்டு சந்தேகத்துக்கிடமாகக் காணப்பட்ட நபர் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.

இதன்போது அவர் பலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர் என்றும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் இலங்கை வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இவரது வீஸாவின் காலத்தை நீடித்துத் தருவதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்து 1 இலட்சத்து 45,000 ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் அதன் பின்னர் மேலும் 80,000 ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் இதுவரை வீசாவைப் புதுப்பித்து காலத்தை நீடித்துத் தரவில்லை என்றும் அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இவரது வாக்கு மூலத்தை பதிவு செய்துகொண்ட பொலிஸார் இவரை கண்டி மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!