நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிமுன்னிலையில் IGP பூஜித் அளித்த சாட்சியம் ( முழு விபரம்)

0 1,115

(ஆர்.யசி )

‘நாளைய தினம் ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகின்றது” என ஏப்ரல் 20 ஆம் திகதி பிற்பகலும், “இன்று ஏதோ நடக்கப்போகின்றது” என 21 ஆம் திகதி காலையிலும் எஸ்.ஐ.எஸ் (அரச புலனாய்வு சேவை) அதிகாரி தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால் என்ன நடக்கப்போகின்றது என்று எனக்கு தெரியவில்லை. அது குறித்து புலனாய்வுத்துறை எந்த தகவலையும் முழுமையாக வழங்கவில்லை’ என நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கூறினார்.

‘தாக்குதலின் பின்னர் ஜனாதிபதி என்னை அழைத்து ‘என்னால் பொறுப்பேற்க முடியாது, நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகுங்கள், உங்களுக்கு தூதுவர் பதவி தருகின்றேன்’ என என்னிடம் கூறினார்” எனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் கடந்த வியாழக்கிழமை (06-06-2019) சாட்சியம் அளிக்கையில் கூறினார்.

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சாட்சியம் முழுமையாக,
கேள்வி :- உங்கள் பதவிகள் பற்றிக் கூறமுடியுமா?

பதில் : நான் பொலிஸ் சேவையில் 1985 மே மாதம் 25ஆம் திகதி இணைந்துகொண்டேன். பின்னர் 1991ஆம் ஆண்டு மே மாதம் பொலிஸ் அத்தியட்சகராகவும், 1996ஆம் ஆண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகவும், 2005ஆம் ஆண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும், 2010ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் பதவி உயர்வு பெற்றேன். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் திகதி அரசியலமைப்பு சபையினால் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டேன். அன்றிலிருந்து இன்றுவரை பொலிஸ்மா அதிபராக செயற்பட்டு வருகின்றேன்.
கேள்வி: அரசியலமைப்பு சபை அங்கீகரித்து ஜனாதிபதி உங்களை நியமித்தார் என்பது பொருத்தமாக இருக்குமல்லவா?
பதில் : ஆம் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

கேள்வி : மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் கொழும்பிலா இருப்பார்கள்?

பதில் : இல்லை, மாகாகாணங்களில் இருப்பார்கள், முதலில் கொழும்பு தலைமையகத்திலேயே அவர்கள் செயற்பட்டனர். எனினும், கடந்த பல வருடங்களாக பிரதிப் பொலிஸ மா அதிபர்கள் மாகாணங்களிலேயே இருக்கின்றனர். எனினும், குறித்த பதவிக்கு காணப்படும் தட்டுப்பாடு காரணமாக சிலர் இரண்டு மூன்று மாகாணங்களுக்கு ஒருவர் பொறுப்பாக இருப்பார். அப்படியானவர்களிடம் முழுமையான பொறுப்பை எதிர்பார்க்க முடியாது.

நாடு முழுவதிலும்  493 பொலிஸ் நிலையங்கள் இருக்கின்றன. மக்கள் தொகை, குற்றங்கள், வாகன நெரிசல் போன்றவற்றை கவனத்தில் கொண்டு பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும். இதுவே துறை தொடர்பான பொலிஸின் கட்டமைப்பு. இது தவிரவும் பொலிஸின் கீழ் விசேட பிரிவுகள் இருக்கின்றன. அவ்வாறான 62 பிரிவுகள் காணப்படுகின்றன. இவை பணிப்பாளர்களின் கீழ் செயற்படுகின்றன. 86 ஆயிரத்துக்கும் அதிகமான பொலிஸார் கடமையாற்றுகின்றனர்.

கேள்வி : நேரடியாக உங்களுக்கு அறிக்கையிடும் பிரிவுகள் உள்ளதா?

பதில் : குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் போன்றவர்கள் எனக்கு நேரடியாக அறிக்கையிடுவார்கள்.

கேள்வி : தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உங்களுக்கு நேரடியாக அறிக்கையிடுவாரா?

பதில் : இல்லை. ஆரம்பத்தில் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்தது. பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. அரசாங்க புலனாய்வு சேவையானது பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவானது பொலிஸ் திணைக்களத்தின் கீழ் இருந்தாலும் பொலிஸ்மா அதிபருக்குப் பொறுப்புக் கூறுவதில்லை. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பொறுப்புக் கூறும் வகையிலேயே நிர்வாகக் கட்டமைப்பு உள்ளது. நிர்வாக செயற்பாடுகள் பொலிஸின் கீழ் வந்தாலும் நடவடிக்கைகள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் காணப்படுகின்றன.

கேள்வி: அப்படியாயின் அவர்கள் யாருக்குப் பொறுப்புக் கூறுவார்கள்?

பதில் : பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குப் பொறுப்புக் கூறுவார். அவர்கள் பொலிஸ் அதிகாரிகளாக இருந்தாலும் செயற்பாட்டு ரீதியாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளனர்.

கேள்வி : வேறு அமைச்சின் கீழ் இருந்தால் அது சரியான செயற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல்களை கொண்டிருக்கும் எனக் கூறுகின்றீர்களா?

பதில் : அப்படியே இருந்தது. எப்போது தேசிய புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஏதாவது முக்கியமான விடயம் இருந்தால் அதனைப் என்னுடன் பகிர்ந்துகொள்வார். தேவையான அவசியம் இருந்தால் மாத்திரமே அப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஏதாவது தகவல்களை நாம் அவர்களுக்கு அனுப்ப முடியாது. ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விடயங்களை நிர்வாக ரீதியாக செய்துகொள்ள முடியும். எனினும் அங்குள்ள நிலைமைகளைக் கண்காணிக்க பொலிஸ் மா அதிபருக்கு அதிகாரம் கிடையாது. நான் அதன் தலைமையகத்துக்குப் போணது கூடக் கிடையாது. அங்கு செல்வதற்கு முயற்சிகள் எடுத்தபோதும் அவை பலனளித்திருக்கவில்லை.
கேள்வி : தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் வேறு அமைச்சின் கீழ் இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையிடும் நடைமுறை எப்போது ஆரம்பமானது?

பதில் : எனது ஞாபகத்துக்கு ஏற்ப ஆரம்பத்திலிருந்தே அவ்வாறே இருந்தது.

கேள்வி : தேசிய பாதுகாப்பு சபைக்கு யார் அழைப்பை விடுப்பது?

பதில் : சாதாரணமாக, பாதுகாப்புச் செயலாளர் தெரியப்படுத்துவார். 2016 ஏப்ரல் 20ஆம் திகதியின் பின்னர் நான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் பங்கெடுத்திருந்தேன். எனினும், 2018 ஒக்டோபர் 23ஆம் திகதியின் பின்னர் எந்தவொது பாதுகாப்பு சபை கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. நான் அதில் கலந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லையென எனக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

கேள்வி :- யாரிடமிருந்து வந்தது?

பதில்:- அப்போதிருந்த பாதுகாப்புச் செயலாளராக இருந்த கபில வைத்தியரத்னவிடமிருந்து. சாதாரணமாக வாய்மூலமே அழைப்பார்கள். பாதுகாப்பு சபையில் கலந்துரையாடப்படும் விடயங்கள் குறிப்பாக எடுக்கப்படுவதில்லை. பெரும்பாலும் வாய்மூலமே பேசப்படும். 2018 ஒக்டோபர் 23ஆம் திகதியின் பின்னர் ஒருநாள் பாதுகாப்புச் சபைக் கூட்டம் பற்றி அறிந்திருந்தேன். பிற்பகல் 4.30 மணியானபோது… எனக்கு அழைப்பு வரவில்லை. நான் பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டேன். ‘உங்களை சங்கடப்படுத்துவதற்கு மன்னிக்க வேண்டும், ஜனாதிபதி உங்களை அழைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார்’ என பாதுகாப்புச் செயலாளர் எனக்குப் பதில் வழங்கினார். அப்படியாயின் எனது சார்பில் யாரையாவது அனுப்பவா எனக் கேட்டதற்கும் தேவையில்லையெனப் பதில் வழங்கப்பட்டது.

கேள்வி: பொலிஸ்மா அதிபர் பாதுகாப்புப் குழுவின் நிரந்தர உறுப்பினர் தானே?

பதில் : ஆம்.

கேள்வி: அப்படியென்றால் நிரந்தர உறுப்பினரை நிராகரிக்கும் நேரத்தில் நீங்கள் ஏன் போகாது இருந்தீர்கள்?
பதில்: யாரும் நிராகரிக்கவில்லையே? பாதுகாப்பு அமைச்சர் தானே என்னை வரவேண்டாம் என்றார்.
கேள்வி : செயலாளருக்கு என்ன அதிகாரம் உள்ளது உங்களை வரவேண்டாம் என கூற? அப்படியாயின் ஏன் அழைக்கப்படவில்லை என்ற காரணத்தைக் கேட்கவில்லையா?

பதில் : சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினால் அதனை நம்புவதைவிட வேறு என்ன செய்ய முடியும். அவருக்கு நான் பொறுப்பு கூறவேண்டிய அதிகாரி. எனவே அவர் கூறியதை அப்படியே கேட்டேன்.

கேள்வி:- இவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை அழைக்கவில்லையா?

பதில்:- நான் அறிந்த வகையில் அவ்வாறு எனக்கு பதிலாக எவரையும் அழைக்கவில்லை. எனக்கு பதிலாக வேறு எவரும் வருகின்றார்களா என நான் கேட்டேன், அதற்கு அவ்வாறு வேண்டாம் என்று கூறினார்கள்.
கேள்வி : ஒக்டோபர் 23ஆம் திகதி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?

பதில் : முக்கியமானதொரு விடயத்தைப் பற்றி மாத்திரம் பேசுவதற்காக அக்கூட்டம் கூட்டப்பட்டமையால் இறுதியில் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தபோது நான் கருத்துக்களை முன்வைத்திருந்தேன்.

கேள்வி : அதன் பின்னர் நீங்கள் பாதுகாப்பு சபைக்கு அழைக்கப்படவில்லையா?

பதில் : அசம்பாவித சம்பவம் நடைபெற்ற பின்னர் ஏப்ரல் 23ஆம் திகதி அழைத்திருந்தார்கள்.

கேள்வி : உங்களை பாதுகாப்பு சபைக்கு அழைக்காமைக்கு விசேட காரணம் ஏதாவது இருப்பதாக நம்புகின்றீர்களா?
பதில் : என்மீதான அவநம்பிக்கையாக இருக்கலாம். வேறு காரணிகளும் இருக்கலாம்.

கேள்வி: அவ்வாறு பாதுகாப்பு தகவல்கள் வெளியில் கசிந்ததாக உங்களுக்கு தெரிந்திருந்ததா?

பதில் : எனக்கு அவ்வாறு ஒன்றும் அறிவிக்கப்படவில்லை.

கேள்வி : நீங்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுபவர். ஜனாதிபதியால் கூட உங்களை அகற்ற முடியாது. அவ்வாறான நிலையில் நீங்கள் இந்த விடயத்தை அரசியல் ரீதியாக ஏன் தெரியப்படுத்த முன்வரவில்லை?

பதில் : நீங்கள் கூறுவதை நான் ஒரு குறிப்பிட்ட அளவு ஏற்றுகொள்ள முடியும். ஆனால் யதார்த்தமாக இது சரிவராது. இதனைக் கேட்கச்சென்றால் நிலைமைகள் வேறுபக்கம் திரும்பலாம் என நினைத்தேன். அதனால் நான் எதனையும் கேட்கவில்லை. ஆகவே, நான் இதில் கவனமாக இருந்தேன். ஒரு வார்த்தை கூறினார்கள். அதனை கேட்டு நான் அமைதியாக இருந்தேன்.

கேள்வி : ஒக்டோபர் 23ஆம் திகதி பாதுகாப்பு சபையில் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரை இடமாற்றம் செய்தமை குறித்த விடயம் ஆராயப்பட்டதா?

பதில் : ஆம், வழமை போன்று நடைபெற்ற பல விடயங்கள் கலந்துரையாடப்படும்போது குறிப்பிட்ட விடயம் வந்தது. அதற்கு நான் பதிலளிக்கவேண்டியிருந்தது. சில விடயங்கள் இணங்கப்பட்டன. எனக்கு சரியான திகதி தெரியவில்லை. சில கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டன.

கேள்வி:- அப்படியென்றால் 23 ஆம் திகதி கூட்டத்தின் சில காரணிகள் தான் உங்களை அத்துடன் பாதுகாப்பு கூட்டத்தில் இருந்து தவிக்க காரணமாக இருந்தது என நினைகிறீர்களா?

பதில்:- ஆம், பெரும்பாலும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். நானும் அப்படித்தான் நினைகின்றேன். ஆனால் என்ன என்பதை சரியான கூறத் தெரியவில்லை.

கேள்வி : முக்கிய வழக்குகளை விசாரிக்கும் ஐ.பி நிஷாந்தவின் இடமாற்றம் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதா?
பதில் : அவர் சிறந்த அனுபவம் உள்ள அதிகாரி. குறித்த கடத்தல் சம்பவத்துடன் முப்படைகளின் பிரதானி சம்பந்தப்பட்டிருப்பதால் குறித்த பொலிஸ் அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டது. பின்னர் நானே அந்த இடமாற்றத்தையும் இரத்துச் செய்தேன்.

கேள்வி : நிஷாந்த சில்வா சில முக்கியமான வழக்குகளை கையாண்டவர். குறிப்பாக 11 இளைஞர்கள் கடத்திக் காணாமல் செய்யப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழகுகளை கையாண்டவர் அல்லவா ?

பதல் : ஆம்.

கேள்வி :- அதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற நோக்கம் இருந்தா?

பதில் :- சரியாக அதுவா என்று தெரியவில்லை.

பதில் :- என்றாலும் அவ்வாறான காரணங்களால் அழுத்தம் வந்து அவரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது அல்லவா ?

பதில் :- ஆம்.

கேள்வி : எங்கிருந்த அந்த அழுத்தம் வந்தது?

பதில் :- (சிறிது யோசித்த பூஜித )….. ஹ்ம்ம் ஜனாதிபதியிடமிருந்தே அழுத்தம் வந்தது. ஜனாதிபதி கூறியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்னிடம் கூறினார்.

கேள்வி : எந்த செயலாளர்?

பதில் :- நினைவில் இல்லை,

கேள்வி : இவ்வாறு கூற வேண்டாம் நன்றாக யோசித்து கூறுங்கள், இது முக்கியமான விடயம்.

பதில் :- ஹ்ம்ம் ஹேமசிறி பெர்னாண்டோ என்று நினைக்கிறன்

கேள்வி :- இல்லை, அப்போது அவர் இருக்கவில்லை அவர் 30 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

பதில்:- ம்;ம்ம் அப்படியென்றால் கபில வைதியரத்ன என்றே நினைக்கிறன். உண்மையில் எனக்கு நினைவில் சில விடயங்கள் இல்லை. அதற்காக மாணிக்க வேண்டும். உண்மையில் 11 மாணவர் கடத்தல் விடயத்தில் இப்பொது உள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானியின் ஏதோ ஒரு தொடர்பும் இருந்தது. இது குறித்து பேச்சுவார்த்தைகளில் முரண்பாடுகள் ஏற்பட்டது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று அழுத்தம் வந்தது.

கேள்வி : இதையெல்லாம் பார்த்தல் பாதுகாப்பு சபைக்கு அப்பால் சென்று பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன?

பதில் : ஆம், அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

கேள்வி : தௌஹீத் ஜமாஅத் அமைப்பை தடைசெய்வதற்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா அறிக்கையிட்டிருந்தாரா?

பதில்: ஆம். இது தொடர்பில் பல விடயங்கள் பகிரங்கமாகக் கூறப்பட வேண்டியுள்ளது. அசம்பாவித சம்பவம் இடம்பெற்ற பின்னர் பொலிஸ்மா அதிபரின் தவறினால்தான் முழு சம்பவமும் இடம்பெற்றது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்போதும் அவ்வாறே பேசப்படுகின்றது.

இன்று வரையில் எந்த விடயத்தையும் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை. ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் முதல் தடவையாக ஊடகங்களுக்கு கதைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சம்பவங்கள் நடந்து ஒன்றரை மாதம் முடிந்துள்ளது. இதில் நான் மட்டுமே குற்றவாளி என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் நான் பதில் கூற செல்லவில்லை.

உண்மையில் இந்த தகவல் எப்போது வந்தது, எங்கிருந்து வந்தது, தகவல் சரியா, உண்மையா என்ற காரணிகள் பல உள்ளன. அதற்கு முதலில் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட சகல கத்தோலிக்க குடும்பங்களுக்கும் கவலையைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஏப்ரல் 9ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கிடைந்த புலனாய்வுத் தகவல்களை நான் தெரிவுசெய்யப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தேன். நான்காம் திகதி புலனாய்வுத் தகவல்கள் கிடைத்ததா என்பது பற்றி எனக்குத் தெரியாது. புலனாய்வு விடயங்களை ஆராயும் வாராந்த கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. அங்கு எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை. அதேபோல் ‘ஐஸ் ஒன்லி’ (Eyes only) என்பதை அன்றுதான் பார்த்தேன். உண்மையை கூறுவதென்றால் பாதுகாப்பு கூட்டத்தில் பேசியிருக்க வேண்டும். ஆனால் பேசவே இல்லை.

9 ஆம் திகதி பிற்பகல் எனக்கு சி.என்.ஐ மூலம் கடிதம் கிடைத்தது. அதனுடன் எஸ்.ஐ.எஸ்யும் சிங்களத்தில் கடந்தம் ஒன்றினை அனுப்பினார். இரண்டு விடயங்களும் ஒன்று. இதில் தற்கொலை தாக்குதல் மற்றும் தேவாலயங்கள் தாக்கப்படும் என்ற விடயங்கள் இருந்தன. விரைவில் தாக்கப்படும் என்ற விடயம் இருந்தது, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்படும் என்றெல்லாம் இருந்தது. இவ்வாறு இருந்தாலும் இறுதியாக செயலாளர் மூலமாக அனுப்பப்பட்டதாக இருந்தது. எனவே நான் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பினேன்.

கேள்வி : பாதுகாப்பு கூட்டத்துக்கு வெளியில் எங்காவது இது பேசப்பட்டுள்ளதா?

பதில் : எனக்கு அதுபற்றித் தெரியாது. ஏப்ரல் 9ஆம் திகதி எனக்கு அறிக்கையொன்று வந்தது. சி.என்.ஐ பணிப்பாளரிடமிருந்து முதலில் அறிக்கையொன்று வந்தது. அதில் இந்திய உயர்ஸ்தானிகராலயம், கிறிஸ்தவ தேவாலயங்களை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளரிடமிருந்து அனுப்பப்பட்ட மற்றுமொரு அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் பற்றியோ உயர்ஸ்தானிகராலயம் பற்றியே எதுவும் குறிப்பிடப்படவில்லை. உறுதிப்படுத்தப்படாத தகவல் எனவும் மிகவும் இரகசியமானது என்றும் கூறிப்பிடப்பட்டிருந்தது.

எனது பார்வைக்காக அனுப்பப்பட்ட அந்த அறிக்கைகள் குறித்து நான் பொலிஸ் அதிகாரிகளை விழிப்புணர்வூட்டத் தீர்மானித்தேன். இதற்கமைய நான்கு அதிகாரிகளைத் நானே தெரிவு செய்தேன். மேல் மாகாணத்துக்கு போக்குவரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரியும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான எம்.ஆர்.லத்தீப், இவரே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு மேலதிகமான பாதுகாப்பு விடயங்களை கையாளும் அதிகாரியாவார், அத்துடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தசாநாயக்க மற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் ஆகிய நால்வருக்கும் எனக்கு கிடைத்த அறிக்கையின் பிரதிகளை அனுப்பிவைத்தேன். பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்ட சகலருக்கும் இதுபற்றிய விடயங்கள் சென்றுள்ளன.

எனினும், இரண்டு பிரதான புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகளிலும் பரஸ்பரம் முரண்பாடான விடயங்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. அதேநேரம், 2018ஆம் ஆண்டு அல்குவைதாவுடன் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் தொடர்பான விசாரணைகளை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டபோது, அது பற்றி அரசாங்க புலனாய்வு சேவை மேற்கொள்வதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகளை நிறுத்துமாறு எமக்குப் பணிக்கப்பட்டது. இதனால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டன. அடிப்படைவாத அமைப்புக்கள் பற்றிய விசாரணைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருந்திருக்கும்.

கேள்வி: புலனாய்வு குறித்து ஆராயும் கூட்டத்தில் நிகழ்ச்சி நிரல் உள்ளதா?

பதில் : குறிப்பாக இக்கூட்டத்துக்கு பாதுகாப்புச் செயலாளர் தலைமை தாங்குவார். அதில் சி.என்.ஐ பணிப்பாளர் விளக்கமளிப்பார். ஏப்ரல் 9ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் இதுபற்றி எந்த விடயமும் கலந்துரையாடப்படவில்லை. 9ஆம் திகதி அறிக்கையின் பின்னர் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி கிடைத்த கடிதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரசாங்க புலனாய்வுப் பிரிவின் தலைவரினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் பின்னர் 19ஆம் திகதி அனுப்பப்பட்ட அறிக்கையில் சஹ்ரானுக்கு நெருக்கமான ஒருவரால் மோட்டார் சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டது தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நேரடியான எந்தத் தகவல்களும் குறிப்பிடப்படவில்லை. சஹ்ரானின் பெயர் இக்கடிதத்தில் இருந்தாலும், ஏற்கனவே கூறப்பட்ட புலனாய்வுத் தகவல்களில் உள்ள விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை.

20ஆம் திகதி அனுப்பப்பட்ட அறிக்கையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் தலைவர் சஹரான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தொடர்பில் தகவல்கள் உள்ளன. இறுதியில் சஹ்ரான் உள்ளிட்ட வலையமைப்புத் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் திகதி தகவல் கிடைத்தும் 21ஆம் திகதிவரை புலனாய்வுப் பிரிவினர் எவ்வாறான திட்டத்தையும் வகுத்திருக்கவில்லை.

கேள்வி : இந்த மோட்டார் வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உங்களுக்கு அங்குள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து அறிக்கை கிடைக்கவில்லையா?

பதில் : சாதாரணமாக ஏதாவது ஒரு பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான இடத்துக்குள் ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றால் அது பற்றி அறிக்கையொன்றை எமக்கு அனுப்ப வேண்டும்.

கேள்வி : கடிதப் பரிமாற்றங்களுக்கு அப்பால் புலனாய்வுத் தகவல் எப்போது கிடைத்தது எனத் தெரியுமா?
பதில் : எனக்குத் தெரியாது, எனினும், ஊடகங்களில் வௌ;வேறு தகவல்கள் உள்ளன.

கேள்வி : நீங்கள் அறிவித்தவர்களில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

பதில் : ஆம், நான் ஏற்கனவே கூறியதைப் போன்று விசேட அதிரடிப்படைக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப்பே ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பிரிவுக்கு மேலதிக பொறுப்பில் இருக்கின்றார். எனினும், எந்தவொரு நபருக்கும் நாம் கிடைக்கும் புலனாய்வுத் தகவல்களையும் தெரியப்படுத்துவதில்லை. பிரபுக்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரிக்கு அனுப்பும்போது குறித்த பிரபுக்கு அறிவிப்பதா இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். பொலிஸ் மா எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி நேரடியாக தெரியப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை எதுவும் இல்லை. புலனாய்வுத் தகவல்கள் அரசாங்க புலனாய்வு சேவைகள் பணிப்பாளர் ஊடாக ஜனாதிபதிக்கு நேரடியாக அனுப்பப்படும்.

கேள்வி: ஏன் நீங்கள் இந்த தாக்குதல் குறித்து வந்திருந்த தகவலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை?
பதில்:- இதில் அவ்வாறு கருதப்படும் அளவிற்கு தகவல் இருக்கவில்லை. மாற்று மதத்தவர்களுக்கு இடையூறு என்றே இருந்தது.

கேள்வி:- என்றாலும் ஏனைய மதத்தவர்கள்; இலக்காக இருந்தனர், தேவாலயங்கள் உயர்ஸ்தானிகராலயம் என்பன என்றெல்லாம் கூறப்பட்டதே? அதை என நீங்கள் சாதாரணமாக கருத்திற்கொண்டீர்கள்?

பதில்:- நான் உரிய விடயங்களை அதிகாரிகளுக்கு வழங்கினேன். என்னால் செய்ய முடிந்ததை தானே செய்ய முடியும்?
கேள்வி:- நீங்கள் ஏன் ஜனாதிபதியை தொடர்புகொள்ள நினைக்கவில்லை?

பதில்:- பொலிஸ்மா அதிபர் ஜனாதிபதியை தொடர்புகொள்ள எந்த கட்டாயமும் இல்லை. பாதுகாப்பு செயலாளருக்கு நான் பொறுப்பு கூறவேண்டிய கட்டாயம் இருந்தது. இது வழமையான ஒன்று. அதேபோல் ஹேமசிறி பெர்னாண்டோ என்னிடம் ஒரு விடயம் கூறினார், என்னவென்றால் ஜனாதிபதிக்கு இது தெரியும், எஸ்.ஐ. எஸ்கூறியதாக தனக்கு தெரிவித்ததாக செயலாளர் எனக்கு தெரிவித்தார். பொதுவான புலனாய்வு தகவல்கள் அவ்வாறு தான் செல்கின்றன என்று கூறினார்.

ஏப்ரல் 20ஆம் திகதி மாலை ஆகும்போது எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன.

கேள்வி :- இருங்கள், நீங்கள் கூறுவது தெளிவில்லை, என்ன தொலைபேசி அழைப்பு? யாரிடம் இருந்து வந்தது?

பதில்:- நிலந்தவிடம் இருந்தும், பாதுகாப்பு செயலாளரிடம் இருந்தும் வந்தது.

கேள்வி:- என்ன கூறினார்கள்? என்ன நேரம் தொலைபேசி அழைப்பு வந்தது?

பதில் :- எனது ஞாபகத்துக்கு அமைய, மாலை 6.30க்கும் 8 மணிக்கும் இடைப்பட்ட நேரம். முதலில் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பில் இருந்தார். ‘டுமாரோ டேஞ்சரஸ், சம்திங் கொயிங் டு ஹப்பன்’ எனக் கூறித் துண்டித்தார். அதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் அழைப்பில் வந்து, ‘நிலந்த அழைப்பை ஏற்படுத்தினாரா?’ எனக் கேட்டார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரேயடியாக எப்படியான அச்சுறுத்தல் ஏற்பட்டது.

அப்போது நான் வீட்டில் இருந்தேன். உடனடியாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கு, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிகளுக்கு தகவலைத் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறினேன்.

‘நாளை எதோ ஒரு அச்சுறுத்தல் உள்ளது, கவனத்தில் கொள்ளுங்கள்’ என்று தெரியப்படுத்தேன். இவ்வாறு வந்தாலும் கூட என்ன அச்சுறுத்தல் என்று எனக்கு தெரியவில்லை. 9 ஆம் திகதி தகவலும் அதன் பின்னர் எந்த தகவலும் இல்லாத நிலையில் இறுதியாக வந்த தொலைபேசி அழைப்பு அனைத்தையும் பார்கையில் இதுவரையிலான காலத்தில் ஏன் பாதுகாப்பு அமைச்சும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காது இருந்தனர், அவசர நிலைமையை கையாள எனக்கு அறிவிக்கவில்லை என்று கேள்விகள் எழுந்தது. வேறு நாடுகளில் இவ்வாறு கையாள்வதில்லை. முதலில் அவசரக’ கூட்டத்தை கூட்டி, தீர்மானம் எடுத்து அவசரகால சட்டம் ஒன்று கையாண்டு எனக்கு செயற்படுத்த கோரிக்கை விடுப்பது தானே முறையானது. அடுத்தநாள் காலையிலும் இதன் தான் செய்தனர்..

கேள்வி:- என்ன …. அடுத்தநாள் காலை என்றால் என்ன? என்ன நடந்தது?

பதில்:- மறுநாள் காலை 7.15 மணியளவில் மீண்டும் அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளர் அழைப்பை ஏற்படுத்தி ‘டுடே சம்திங் கொயிங்டு ஹப்பன்ட்’ எனக் கூறினார். என்னால் முடிந்த மட்டத்தில் சகல நடவடிக்கையையும் எடுத்திருந்தேன். எனினும் மேல் மட்டத்திலிருந்து எனக்கு எந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை. பொலிஸாருக்கு மாத்திரம் பொறுப்பு அல்ல. சகலருக்கும் கூட்டுப்பொறுப்பு உள்ளது.

கேள்வி :- 21 ஆம் திகதி தொலைபேசியில் ஏதும் மேலதிக தகவல்கள் வரவில்லையா?

பதில்:- இல்லை, மேலதிக தகவல் ஒன்றும் இருக்கவில்லை. நான் வழைமையாக காலையில் அறிக்கை வழங்குவேன். அந்த நேரத்தில் காலையில் மீண்டும் எஸ்.ஐ. எஸ் அதிகாரி அழைப்பு விடுத்தார்.

கேள்வி:- அப்படியென்றால் இரண்டு தடவைகள் ?

பதில்:- ஆம், ஆனால் ‘இன்று எதுவும் நடக்கலாம்’ என்றார். என்னவென்று கூறவில்லை.

கேள்வி : ஏப்ரல் 9ஆம் திகதி அறிக்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் இலக்குi வைக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையில் 21ஆம் திகதி உதிர்த்தஞாயிறு தினம் என்பதால் தேவாலயங்கள் பற்றி நீங்கள் ஏன் யோசிக்கவில்லை? உயர்மட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்பது சரி. ஏப்ரல் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக இவ்விடயம் கவனத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பற்றி பாதுகாப்புச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டதா என அரசாங்க புலனாய்வு சேவையின் பணிப்பாளரிடம் நீங்கள் கேட்டீர்களா?

பதில் : நான் எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. நடைமுறையில் ஒருங்கிணைப்பது சி.என்.ஐ உடன் தொடர்புபட்டிருப்பார் என்பதால் அவர்கள் அறிந்திருப்பார்கள். எனக்கு முடிந்ததைச் செய்தேன்.

கேள்வி : 2018 ஓகஸ்ட் 23ஆம் திகதிக் முன்னர் பொலிஸ் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடனான தொடர்புகள் எப்படி இருந்தன?

பதில் : சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருக்கும்போது சில விடயங்களை செய்ய முடிந்தது. சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நேரடியாகக் கதைத்து பிரச்சினைகளைத் தீர்க்க முடிந்தது. எனினும், பின்னர் நிலைமைகள் மாறியதும் குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின் பின்னர் செயற்பாடுகள் கஷ்டமானது. அதன் பின்னர் பல விடயங்களில் காலம் தாழ்த்தும் நிலைமையே ஏற்பட்டது. கவலைக்குரிய விடயங்கள் இருக்கின்றன.

கேள்வி : குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மாவனல்லை சம்பந்தின் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருடன் புலனாய்வுத் தகவல்கள் பரிமாறப்பட்டனவா?
பதில் : குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்குத் தேவையாயின் உதவியைப் பொலிஸார் வழங்குவர். எனினும் அவர்கள் தமக்கே உரிய பாணியில் விசாரணைகளைத் தொடர்வார்கள்.

கேள்வி : குண்டுத் தாக்குதல்களின் பின்னர் உங்களை பதவி விலகுமாறு யாராவது கோரினார்களா?

பதில் : ஆம்

கேள்வி : யார் பதவி விலகக் கோரினார்?

பதில் : ஜனாதிபதி. ஏப்ரல் 23ஆம் திகதி இரவு எட்டு மணிக்கு தன்னைச் சந்திக்க வருமாறு கூறினார். ஜிம்மில் இருந்த நான் அவரைச் சந்திக்கச் சென்றேன். அப்போது ‘என்னால் இதற்கு பொறுப்புக் கூற முடியாது. நான் அறிந்திருக்காத ஒரு விடயம். நடந்த சம்பவத்துக்கு முழுமையான பொறுப்பு உங்களுடையது, உரிய முறையில் எனக்குத் தெரியப்படுத்தவில்லை’ என்றார்.

பொலிஸ் மா அதிபர் என்ற ரீதியில் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையிலும் மௌனமாக இருந்தீர்கள். எனவே நீங்களே பொறுப்புக் கூற வேண்டும். விசாரணைக் குழுவொன்றை அமைக்கப்போகின்றேன். அதில் தவறிழைத்தவர்கள் நீங்கள் என்றே தெரியவரும். தண்டணையும் உண்டு. ஓய்வூதியம் இன்றி வீடு செல்லப்போகின்றீர்களா? தவறை ஏற்றுக் கொண்டு பதவி விலகுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

சி.என்.ஐ அறிக்கை தொடர்பில் நான் முன்னர் அனுப்பியிருந்த பதில் கடிதத்தை காண்பித்தேன். அதனைப் பார்த்துவிட்டு எதுவும் பேசவில்லை. கடந்த 34, 35 வருடங்களாக பொலிஸ் சேவையில் இருக்கின்றேன். எப்போதும் பொலிஸைப் பற்றி சந்திக்கும் ஒருவன். களவு, பொய் செய்யவில்லை. சிறுசிறு விமர்சனங்களைத் தவிர எந்த குற்றச்சாட்டுக்களும் என்மீது இல்லை. சேவையிலிருந்து செல்லும்போது ஓய்வூதியம் இன்றி சென்றால் பிள்ளைகளுக்கு என்ன கூறுவது? எனக்கு சொந்தமாக இருக்க ஒரு இடம்கூட இல்லை. ஏதாவது செய்ய முடிந்தால் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டேன். 8.45 மணியளவில் நான் சென்றுவிட்டேன்.

அதன் பின்னர் ஏப்ரல் 25ஆம் திகதி தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி கேட்ட கடிதத்தை இன்னும் தரவில்லையெனக் கூறியதுடன், ஏதோ கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை கடுமையாக ஏசினார். நான் எதுவும் பேசவில்லை மௌனமாக இருந்தேன்.

29ஆம் திகதி கட்டாய விடுமுறைக கடிதம் வழங்கப்பட்டது. எனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி தருவதாகக் கூறினார். எனினும் அவ்வாறான வரப்பிரசாதங்களை நான் எதிர்பார்ப்பவன் அல்ல. நான் அவ்வாறு செய்தால் பொலிஸாரைக் காட்டிக்கொடுப்பதாக அமைந்துவிடும். தவறு செய்யாமல் தவறை ஏற்றுக்கொள்வதா. பாதுகாப்பில் காணப்படும் ‘சிஸ்டம் பெயிலியரே’ இதற்குக் காரணம். அது மாத்திரமன்றி ‘பாதுகாப்புத் துறையில் காணப்படும் ‘ப்ரட்டக்கோல் ஒருங்கின்மை’யும் இதற்கான காரணமாகும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!