ஹசலக மஸாஹிமாவினால் அடிப்படை மனித உரிமை மீறல் மனுத் தாக்கல்!

0 626

                                                                                    (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
ஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த  முஸ்லிம் பெண் ஒருவர், தான் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பாத்திமா மஸாஹிமா என்ற இந்தப் பெண், அணிந்திருந்த ஆடையில் தர்மச் சக்கரம் காணப்பட்டதாகத் தெரிவித்த ஹசலக பொலிஸார், அவரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.இதன் பின்னரான நீதிமன்ற விசாரணைகளின் போது குறித்த பெண் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, தான் இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து  அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
தான் அணிந்திருந்த ஆடையில் தர்மச் சக்கரம் காணப்படுவதாகக் கூறி தன்னைக் கைது செய்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைத்தமை மூலம் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, அதற்காக தனக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும் என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தனது ஆடையில் பொறிக்கப்பட்டிருந்தது தர்மச் சகரம் அல்ல.  அது கப்பலின் சுக்கான் எனவும் அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணிகளான ஹரினி ஜயவர்தன, புலஸ்தி ஹேவாமான, ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சீ. வெலிஅமுன ஆகியோர் ஊடாக இந்த மனு இன்று (14) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் தனக்கு நஷ்டயீடு வழங்கப்படுவதுடன் தனது விவகாரத்தில் தவறாக நடந்து கொண்ட அதிகாரிகள் மீது விசாரணைகளை மேற்கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஹசலக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக உள்ளக நடவடிக்கையாக அவர் குருணாகல் பொலிஸ் நிலையத்தில் சாதாரண தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்டமை தெரிந்ததே.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!