‘நேர் கொண்ட பார்வை’ ட்ரைலரில் அனல் பறக்கும் நீதிமன்றக் காட்சிகள்

0 89

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் – வித்யா பாலன் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது.

விஸ்வாசம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு ஹிந்தியில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்கப் போகிறார் என்றதும் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித்தா என்று ஆச்சரியப்பட் டார்கள்.

பிங்க் படத்தைப் பார்க்காதவர்கள் இந்த நேர்கொண்ட பார்வை ட்ரைலரைப் பார்த்தால் அதிசயத்துடன்தான் பார்ப்பார்கள். நிதானமாக ஆரம்பிக்கும் ட்ரைலர் அப்படியே அழுத்தமாக நகர்ந்து வேகமெடுத்துப் பயணித்து கடைசியில் எக் ஷனில் வந்து பிரமிக்க வைக்கிறது.

இந்தப் படம் அஜித்தின் நடிப்பைப் பற்றி அழுத்தமான பதிவை, பார்வையைக் கொடுக்கும் படமாக அமையும் என ட்ரைலரே சொல்லிவிடுகிறது.

வக்கீல் கதாபாத்திரம் என்றாலே வசனங்கள் சிறப்பாக இருக்கும். அதைப் பேசி நடிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது காலம் காலமாக இருக்கும் ஒன்று. அஜித் இவ்வளவு, அழுத்தம், திருத்தமாக அந்த வக்கீல் கதாபாத்திரத்திற்கு தன் பேச்சின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

அதிலும், “நீங்க கன்னித் தன்மையோட இருக்கீங்களா, இல்லையா” , “இப்படி நெறைய, நெறைய, நெறைய, நெறைய, நெறய”, “ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்டறதுக்காக இன்னொருத்தரை ஏன் அசிங்கப்படுத்தறீங்க,” வசனங்களுக்கு தியேட்டர்களில் கைத்தட்டல் உறுதி என்பதை இந்த ட்ரைலரே உறுதிப்படுத்துகிறது.

ட்ரைலரின் முடிவில் ஒருத்தரை இரும்புத்தடியால் அடித்துவிட்டு அஜித் வெறித்துப் பார்க்க, லோ ஆங்கிள் டிராலியில் அவரை நோக்கி பாயும் காமிரா, பின்னணியில் பச்சை நிற மரத்தில் ஒளிவெள்ளம், அஜித்தின் கறுப்பு உடை, சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் அஜித் ரசிகர்களை துள்ளிக் குதிக்க வைக்கும் அதிரடி எக் ஷன் காட்சி.

யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தில் காட்சிக்குக் காட்சி அதிரடி புரியப் போகிறது என்பது இப்போதே தெரிந்துவிடுகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு, கோகுல் சந்திரன் படத் தொகுப்பு, கதிர் கலை இயக்கம் இந்தப் படத்தின் மிகப் பெரும் பக்கபலமாக இருக்கப் போகிறது.

அஜித்தின் படமாக இருந்தாலும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பும் நிச்சயம் பேசப்படலாம். டிவி விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசும் ரங்கராஜ் பாண்டே, அஜித்தின் எதிர் வக்கீலாகப் போட்டி போடுகிறார். ட்ரைலரின் ஒரே குறை வித்யா பாலனை ஒரு பிரேமில் கூட காட்டாததுதான்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் இன்னொரு முகத்தை, இன்னொரு பார்வையை இந்தப் படத்தில் காட்டப் போகிறார். அதைக் காண ஆகஸ்ட் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.

error: Content is protected !!